தேனி – சென்னை இடையே புதிய ரயில் சேவையை 2022-ல் அறிமுகம் செய்ய தெற்கு ரயில்வே முடிவெடுத்துள்ளது. அந்த வகையில், சென்னை – மதுரை இடையேயான அதிவிரைவு ரயிலை, போடி வரை நீட்டிக்க தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது. போடி – தேனி – மதுரை இடையே 2010-ல் தொடங்கிய அகல ரயில் பாதை பணிகள் அடுத்த ஆண்டு நிறைவடைந்த உடன், ரயில் சேவை துவங்கும் என்றும் கூறப்படுகிறது.
முன்னதாக போடி – தேனி – மதுரை குறுகிய ரயில் பாதையாக இருந்த வரை, மதுரை வரை மட்டுமே ரயில்கள் இயக்கப்பட்டன. திண்டுக்கல் – பழனி இடையே அகல ரயில் பாதை பணிகள் முடிவடைந்த உடன் சென்னையில் இருந்து பழனிக்கு ரயில்கள் இயக்கப்படும் நிலையில், தேனி வழியாக போடி வரை ரயில் சேவையை தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் இருந்து தேனி வழியாக போடிக்கு ரயில் இயக்கப்படும் என்றால் தேனி மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறும் என்பதில் மாற்றமில்லை.