திமுக தலைகீழாக நின்றாலும் கூட தமிழகத்தில் நீட் தேர்வு நடக்கும் என சென்னை விமான நிலையத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டத்தை சேர்ந்த மாணவன் தனுஷ் என்பவர் நீட் அச்சம் காரணமாக உயிரிழந்துள்ளார்.இது மிகவும் துயரமான சம்பவம் பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம் விரைவில் அவர் இல்லத்திற்கு சென்று அவரின் பெற்றோருக்கு ஆறுதல் தெரிவிக்க உள்ளோம் என்றார், இதற்கெல்லாம் காரணம் தமிழகத்தில் திமுக நீட் தேர்வை வைத்துக் கொண்டு மிகப்பெரிய அரசியல் செய்து கொண்டிருக்கின்றனர். இன்று காலை சட்டமன்றத்தில் நீட் தேர்வுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது இதை எதிர்த்து பாரதிய ஜனதா கட்சியினர் வெளிநடப்பு செய்துள்ளனர் இது நீட்டை வைத்து அவர்கள் வியாபாரம் செய்வதற்கு எதிராக வெளிநடப்பு செய்யப்பட்டுள்ளது.
நீட் தேர்வுக்கு இதுவரை தமிழகத்தில் 14 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 2010ஆம் ஆண்டு திமுக காங்கிரஸ் கூட்டணி தான் மருத்துவக் கல்லூரியில் சேருவதற்கு முன்பு நீட் நுழைவுத்தேர்வை எழுத தீர்மானம் கொண்டு வந்தது. நீட் தேர்வை கொண்டுவந்தது காங்கிரஸ் திமுக கூட்டணியாக இருந்தாலும் கூட நீட் என்பது ஏழை எளிய மன்னர்களுக்கும்,நடுத்தர மாணவர்களுக்கும் வரப்பிரசாதமாக இருக்கிறது. அவர்கள் கொண்டுவந்த தீர்மானத்தையே எதிர்த்து தற்போது தமிழக சட்டமன்றத்தில் அரசியல் பேசி வருகின்றனர்.
தற்போது ஒரு லட்சத்திற்கும் அதிகமான மாணவ மாணவிகள் நீட் தேர்வு எழுதியுள்ளனர். அவர்கள் யாரும் எந்தக் குறையும் கூறவில்லை ஆனால் திமுகவினர் செய்யும் அரசியல் காரணமாக மாணவர்கள் உயிரிழந்து இருகின்றனர். யாரெல்லாம் நீட் தேர்வை வைத்து அரசியல் செய்து பொய் வாக்குறுதி கொடுத்தார்களோ அவர்கள் மீது காவல்துறை இயக்குனர் மற்றும் சேலம் மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் அவர்கள் வழக்கு பதிவு செய்து குற்றம் சாட்டப்பட்டவர்களாக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.இது தனுஷ் அவர்களின் மரணத்திற்க்கு நாம் கொடுக்கும் நீதியாக இருக்கும். பாரதிய ஜனதா கட்சியை பொறுத்தவரை நாங்கள் பொய்யைக் கூறி,மக்களின் மனநிலையை மாற்றி ஓட்டை வாங்கி எம்எல்ஏ,எம்பிகள் ஆக வேண்டும் என்று எண்ணம் எங்களுக்கு கிடையாது.நாட்டு மக்களுக்கும் தமிழக மக்களுக்கும் எது தேவையோ அதை உரக்கச் சொல்வோம். தமிழகத்தில் ஏழை எளிய மாணவர்கள் பணம் கொடுக்காமல்,அரசியல்வாதியை நாடாமல் அரசு மருத்துவக் கல்லூரியில் படிக்க முடியுமென்றால் அது நீட் தேர்வின் மூலமாக மட்டும் தான் முடியும். தமிழகத்தில் திமுகவினர் தலைகீழாக நின்றாலும் கூட நீட் தேர்வு நடக்கும் என்றும் அண்ணாமலை கூறினார்.