பிரபல விஜிபி குழுமத்தைச் சேர்ந்த கட்டுமான நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மீது பண மோசடி புகாரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
பிரபல விஜிபி குழுமத்தின் கட்டுமான நிறுவனம் விஜிபி ஹவுசிங் பிரைவேட் லிமிடெட். இதன் நிர்வாக இயக்குனர் விஜிபி பாபு தாஸ். இவர் மீது சென்னை அண்ணாநகரைச் சேர்ந்த கிருஷ்ணா ராவ் என்பவர் ஒரு கோடியே 80 லட்ச ரூபாய் பண மோசடி செய்ததாக கொடுத்த புகாரின் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். கிருஷ்ணராவ் அளித்த புகாரில் விஜிபி குழுமத்துடன் தொடர்புடைய நிறுவனமான பிஎன்பி என்ற நிறுவனத்தின் இயக்குனர் மது என்பவர் மூலம் இந்தப் பணத்தை கொடுத்ததாக புகாரில் தெரிவித்துள்ளார். குறிப்பாக விஜிபிக்கு சொந்தமான மூன்று சொத்துக்களின் ஆவணங்களை அடிப்படையாக வைத்து, 2017 ஆம் ஆண்டு 70 லட்ச ரூபாய் 50 லட்ச ரூபாய் மற்றும் 60 லட்ச ரூபாய் என மூன்று தவணைகளில் பணத்தை கொடுத்ததாக கிருஷ்ண ராவ் தெரிவித்துள்ளார்.
முதற்கட்டமாக 5 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் பணத்தை திருப்பிக் கொடுத்த விஜிபி பாபு தாஸ், அதன்பின் பணத்தை கேட்கும் போது , தன்னை சந்திக்க மறுத்ததாகவும், தன அழைப்புகளை ஏற்காமல் தவிர்த்து வந்ததாகவும் குற்றம்சாட்டியுள்ளார். இந்நிலையில் வாங்கிய பணத்திற்காக கொடுக்கப்பட்ட சொத்துக்கள் தொடர்பான ஆவணங்களை ஆய்வு செய்த போது, தன்னுடைய அனுமதி இல்லாமல் வேறொரு நபர்களுக்கு விற்பனை செய்தது தெரியவந்து அதிர்ச்சி அடைந்ததாக குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து கடந்த டிசம்பர் 2019 ஆம் ஆண்டு சென்னை மத்திய குற்றப்பிரிவில் புகார் அளித்தும் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படவில்லை என தெரிவித்துள்ளார். முன்னதாக கடந்த நவம்பர் 2019 ஆம் ஆண்டில் விஜிபி பாபுதாஸ், சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் பொய் புகார் ஒன்றை அளித்ததாகவும், அதன் அடிப்படையில் தன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளதாகவும் கிருஷ்ணராவ் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக கடன் வாங்கித் தருவதாகக் கூறி ஏமாற்றியதாக விஜிபி பாபு தாஸ் அளித்த புகாரின் அடிப்படையில்,தன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, அதனடிப்படையில் தற்போது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விஜிபி குழும நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் விஜி பி பாபு தாஸ் மற்றும் பிஎன்பி என்ற நிறுவனத்தின் இயக்குனர் மது ஆகியோர் மீது பண மோசடி செய்ததாக இரண்டு பிரிவுகளின் கீழ் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக விஜிபி பாபுதாஸிற்கு சம்மன் அளித்து விசாரணை நடத்தவும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் திட்டமிட்டுள்ளனர்