தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை 8 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.
மழைநீர் வடிகால்களை மழை காலத்திற்கு முன்பாக தூய்மைப்படுத்தும் பணிகள் மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டதை தொடர்ந்து “மெகா தூய்மைப்படுத்தும் பணிகள்” தூத்துக்குடியில் இன்று தொடங்கியது. இதனை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தார்.
இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், இந்த பணிகள் இன்று முதல் 5 நாட்கள் தூத்துக்குடி மாநகராட்சியில் உள்ள நான்கு மண்டலங்களிலும் நடைபெறுகிறது. தூய்மை பணியில் தூத்துக்குடி மாநகராட்சி உள்ள 4 மண்டலங்களிலும் சுமார் 750 பணியாளர்கள், மேள்பார்வையாளர்கள் ஈடுபட்டுள்ளனர். மாவட்டத்தில் மழை காலத்திற்கு முன்பாக அனைத்து பணிகளையும் முடித்துவிட திட்டமிட்டு தூய்மைப்படுத்தும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. மழை காலங்களில் மாநகர பகுதிகளில் தண்ணீர் தேங்குவதை தடுக்கும் விதமாக 32 தாழ்வான இடங்கள் கண்டறியப்பட்டு அவற்றில் 26 இடங்களில் மழைநீரை உறிஞ்சி வெளியேற்ற மின்சார மோட்டார் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது என்றார்.