தமிழக முதல்வர் பழனிச்சாமிக்கு இளஞ்சிறுத்தைகள் கோரிக்கை மனு!

தூத்துக்குடியில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் மாவட்ட ஆட்சியரிடம், இளஞ்சிறுத்தைகள் எழுச்சிப்பாசறையின் சார்பில் கோரிக்கை மனுக்கள், மின்னஞ்சல் வாயிலாக அனுப்பப்பட்டது.

அந்த மனுக்களில் இடம் பெற்றுள்ள கோரிக்கைகள் வருமாறு: கடந்த 16-12-2019 அன்று ஆறுமுகநேரி அருகே வாகனம் மோதி உயிரிழந்த துப்புரவு பணியாளர் கோமதி மற்றும் படுகாயமடைந்த ஜெயலட்சுமி ஆகியோர் குடும்பத்திற்கும்; 2020, ஜூலையில் உடன்குடி அருகே சிவலூரில் பதனீர் எடுக்க பனையில் ஏறியபோது தவறி விழுந்து உயிரிழந்த பனையேறும் தொழிலாளி வடிவேலுவின் குடும்பத்திற்கும்;

2020 ஜூலையில் வெள்ளாளன்விளை அருகே மின்கம்பத்தில் வேலை பார்த்துக்கொண்டிருந்தபோது கம்பத்தில் தொங்கியபடியே உயிரிழந்த பரமன்குறிச்சி மின்வாரியத்தின் மின்வட்ட கம்பி ஒப்பந்த பணியாளரான இராதாகிருஷ்ணன் குடும்பத்திற்கும் தமிழக முதல்வர் நிவாரண நிதியை வழங்க வேண்டும்.

உடன்குடி அனல்மின் நிலையப் பணிகளில் (ஒப்பந்த பணிகளையும் சேர்த்து) சுற்றுவட்டாரப் பகுதி இளைஞர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்; வெளிமாநிலத் தொழிலாளர்களை வெளியேற்ற வேண்டும்.

கந்தசஷ்டி, தீபாவளியை முன்னிட்டு செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயிலை இயக்க வேண்டும்; திருச்செந்தூர் முருகன் கோவிலை நம்பி வாழும்தொழிலாளர்களை கோவிலைச் சுற்றி தொழில் செய்ய அனுமதிக்க வேண்டும்; முருகன் கோவில் பணியாளர்களை சாதிய நோக்குடன் தொடர்ந்து தாக்கிவரும் பார்ப்பனர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கடந்த 10-ஆண்டுகளுக்கும் மேலாக கோவிலில் பணி செய்யும் துப்புரவு பணியாளர்கள் மற்றும் பாதுகாவலர்களை நிரந்தர பணியாளர்களாக்க அரசாணை பிறப்பிக்க வேண்டும்; திருக்கோவில் செயல் அலுவலராக மீண்டும் ஐஏஎஸ் அதிகாரியை நியமிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

முற்போக்கு மாணவர் கழகத்தின் மாவட்ட அமைப்பாளர் இரகுவரன் மற்றும் கட்சியின் சாத்தான்குளம் ஒன்றிய துணைச்செயலாளர் சுரேந்தர் ஆகியோர் உடனிருந்ததாக, தூத்துக்குடி தெற்கு மாவட்ட இசிஎபா அமைப்பாளர் சு.விடுதலைச்செழியன் தெரிவித்துள்ளார்.

Translate »
error: Content is protected !!