எழும்பூரில் அமைந்துள்ள காவலர் அருங்காட்சியகத்தை நடிகர் சிவகார்த்திகேயன் பார்வையிட்டார். சென்னை எழும்பூரில் காவலர் அருங்காட்சியகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அண்மையில் பொதுமக்கள் பார்வைக்காக திறந்து வைத்தார். காவலர் அருங்காட்சியத்தில் காவலர்கள் பயன்படுத்திய பழமையான பொருட்கள் பாதுகாக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று பிற்பகலில் காவலர் அருங்காட்சியகத்தை பார்வையிட வந்த நடிகர் சிவகார்த்திகேயனுக்கு காவல்துறை அதிகாரிகள் வரவேற்பளித்தனர். பின்பு காவலர் அருங்காட்சியத்தை சுமார் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக நடிகர் சிவகார்த்திகேயன் பார்வையிட்டார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், காவலர் அருங்காட்சியகம் என்பதை கேள்விப்பட்டவுடன் அதில் என்ன இருக்கும் என்பதை காண ஆர்வமாக இருந்தது. நானும் ஒரு போலிஸ் குடும்பத்தில் இருந்து வந்தவன்தான் என்பதால் இதில் அதிக அளவில் ஆர்வம் உள்ளது. போலிஸ் ஆகவேண்டும் என்ற லட்சியமுடையவர்கள் நிச்சயம் வந்து பார்க்க வேண்டிய இடமாக இந்த காவலர் அருங்காட்சியகம் இருக்கும் என்று கூறியுள்ளார்.