சென்னை உள்பட பல மாவட்டங்களில் பெய்து வரும் மழையால் தமிழகம் குளிர்ந்துள்ளது; தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து, கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று முதல் அவ்வப்போது மழை நீடித்து வருகிறது. இன்றும் பெய்த மழையால், பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகினர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் பொன்னேரி கும்மிடிப்பூண்டி மீஞ்சூர் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை பெய்துள்ளது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்து குடியிருப்பு பகுதிகளில் புகுந்ததால் பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகினர்.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில தினங்களாகப் பெய்துவரும் கனமழையால், பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 27 ஏரிகள் நிரம்பி உபரிநீர் வெளியேறி வருகிறது. தொடர்மழையால் பீர்க்கன்கரணை ஏரியின் கரைகள் சேதமடைந்துள்ளன. செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூரில் உள்ள ஏரி முழு கொள்ளளவை எட்டியது.
செம்பரம்பாக்கம் ஏரி முழு கொள்ளளவை தொட்டுள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டத்தை தொடர்ந்து கண்காணிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 24 அடி உயரம் கொண்ட செம்பரப்பாக்கம் ஏரியில் நீர்மட்டம் தற்போது 21 அடியை எட்டியது. செம்பரப்பாக்கம் ஏரியால் வெள்ளம் ஏற்படுவதை தடுக்க விரைவில் எச்சரிக்கை அறிவிப்பு வெளியாகிறது.
இதேபோல் தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் மழை பெய்துள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக, வந்தவாசி – சேத்துப்பட்டு நெடுஞ்சாலையில் உள்ள புளிய மரம் வேரோடு சாய்ந்து விழுந்தது. கனமழையால், கடலூர் மாவட்டம் வீராணம் ஏரி வேகமாக நிரம்பி வருகிறது. திருப்பூர் மாவட்டத்திலும் திருப்பூர், அவிநாசி உள்பட பல இடங்களில் மழை பெய்துள்ளது.
மதுரை மாவட்டத்தில் உசிலம்பட்டி, செல்லம்பட்டி, சேடப்பட்டி; திருச்சி மாவட்டத்தில் லால்குடி, புள்ளம்பாடி, சமயபுரம் உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்துள்ளது. திருநெல்வேலி மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் தேவையின்றி பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் என்று மாவட்ட காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. தென்காசி மாவட்டத்தில் பெய்து வரும் மழையால், குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று காலையில் இருந்து பலமணி நேரம் கனமழை பெய்தது. நாகர்கோவில், மார்த்தாண்டம் பகுதியில் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. மழைக்காலம் என்பதால், பழைய கட்டடங்களில் தங்க வேண்டாம் என்று, – பேரிடர் அபாய குறைப்பு முகமை எச்சரிக்கை விடுத்துள்ளது.