தீபாவளி கொண்டாட்டத்தின் போது பட்டாசு வெடித்ததில் இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட தகராறில், ஒருவர் உயிரிழந்தார்.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள எண்டபுளி ஊராட்சியில் தீபாவளி தினத்தன்று, பட்டாசு வெடிப்பதில் இருதரப்பினர் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
தங்களது பகுதியில் பட்டாசு வெடிக்ககூடாது என்று ஒரு தரப்பினர் கூறியதால் மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவிக்க, அங்கு தகராறு ஏற்பட்டது. அப்போது, ஒரு பிரிவினரை இளைஞர்கள், திடீரென தாக்கினர். இதில், சுப்பையா மகன் முருகன் என்பவர் மயங்கி விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
தகவல் அறிந்த பெரியகுளம் காவல்துறையினர் விரைந்து வந்து பலியான முருகனின் உடலை கைப்பற்றி பெரியகுளம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
இதையடுத்து, மேலும் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்க, காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய்சரண் நேரில் வந்து எண்டபுளி பகுதியை ஆய்வு மேற்கொண்டார்.