நெல்லை நெல்லையப்பர்- காந்திமதி அம்பாள் திருக்கல்யாணம் கோவில் ஆயிரங்கால் மண்டபத்தில் வைத்து வெகுவிமர்சையாக நடைபெற்றது. தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லை நெல்லையப்பர் திருக்கோவில். இக்கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கடந்த 22ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 15 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் காலை, மாலை இரண்டு வேளைகளிலும் அம்பாள் சன்னதி ஊஞ்சல் மண்டபத்தில் வைத்து காந்திமதி அம்பாளுக்கு சிறப்பு பூஜைகளும், அபிஷேகமும் நடைபெற்றது. திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான திருநீறு பூசிய திருக்கோலத்தில் தபசு இருக்கும் காந்திமதி அம்பாளுக்கு கம்பா நதியில் சுவாமி நெல்லையப்பர் காட்சி கொடுக்கும் வைபவம் நேற்றைய தினம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இன்று அதிகாலை கோவில் ஆயிரங்கால் மண்டபத்தில் வைத்து சுவாமி நெல்லையப்பர்- காந்திமதி அம்பாள் திருக்கல்யாணம் வெகு விமர்சையாக நடைபெற்றது. திருக்கல்யாணத்தை முன்னிட்டு அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகங்களும், அதனை தொடர்ந்து சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது. பின்னர் மாப்பிள்ளை திருக்கோலத்தில் சுவாமி நெல்லையப்பர் பஞ்ச வாத்தியங்கள் இசைக்க தங்கப்பல்லக்கில் சுவாமி சன்னதியில் இருந்து ஆயிரங்கால் மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டார். அதனை தொடர்ந்து நெல்லை கோவிந்தசுவாமி நெல்லையப்பருக்கு பாத பூஜை செய்யும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. பின்னர் ஆயிரங்கால் மண்டபத்தில் திருமண கோலத்தில் எழுந்தருளி இருந்த காந்திமதி அம்பாளுக்கும், சுவாமி நெல்லையப்பருக்கும் சிறப்பு பூஜைகளும், மாலை மாற்றும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
பின்னர் யாகசாலையில் வைத்து பூஜை செய்யப்பட்ட திருமாங்கல்யம் சுவாமி நெல்லையப்பர் கைகளில் வைத்து பூஜை செய்யப்பட்டு காந்திமதி அம்பாளுக்கு அணிவிக்கப்பட்டு திருக்கல்யாணம் நடைபெற்றது. தொடர்ந்து திருமண சடங்குகள் செய்யப்பட்டு மகாதீபாராதனை நடைபெற்றது. இந்த விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.