வங்கியில் வேலை வாங்கித்தருவதாக ரூ. 23 லட்சம் மோசடி செய்த நபரை சென்னை வேப்பேரி போலீசார் கைது செய்தனர். தலைமறைவான அவரது மகனை தேடி வருகின்றனர்.
கோபாலகிருஷ்ணன்
சென்னை, வியாசர்பாடி, சாஸ்திரிநகர், 14வது தெருவைச் சேர்ந்தவர் ஜெனிபர் ஆரோக்கியமேரி (வயது 30). இன்டெர்நெட் சென்டர் நடத்தி வந்தார். கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் மாதம் சென்டருக்கு வந்த வேப்பேரியைச் சேர்ந்த ராஜ்பரத் என்பவர் அடிக்கடி வந்து குடும்ப நண்பர் போல பழகியுள்ளார். அப்போது ஜெனிபருக்கு தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி யில் வேலை வாங்கித் தருவதாக ராஜ்பரத்தும் அவரது தந்தை கோபாலகிருஷ்ணனும் ஆசை வார்த்தை காட்டியுள்ளனர்.
தலைமறைவான ராஜ்பரத்
அதனை நம்பிய ஜெனிபர் தனக்கும் தனது தோழிகளான பரிமளா, ரேவதி ஆகியோர்களிடம் மொத்தம் ரூ. 23 லட்சம் நேரிலும் மற்றும் வங்கி மூலமாகவும் கொடுத்துள்ளார். பணத்தை பெற்றுக் கொண்ட ராஜ்பரத்தும் அவரது தந்தை கோபாலகிருஷ்ணனும் வேலை வாங்கித்தராமல் ஏமாற்றியுள்ளனர். இது தொடர்பாக ஜெனிபர் கடந்த பிப்ரவரி மாதம் கீழ்ப்பாக்கம் துணைக்கமிஷனரிடம் புகார் அளித்தார். கடந்த 9 மாதங்களாக தலைமறைவாக இருந்து வந்த நிலையில் கோபாலகிருஷ்ணனை வேப்பேரி போலீசார் இன்று கைது செய்தனர். அவரது மகன் ராஜ்பரத் தலைமறைவாகி விட்டார்.
தலைமறைவான ராஜ்பரத் மீது ஏற்கனவே வேப்பேரி போலீசில் இதே போல வேலை வாங்கித்தருவதாக மேசடியில் ஈடுபட்டதாக வழக்கு நிலுவையில் உள்ளதாகவும், இன்னும் பலரிடம் அவர் ரூ. 84 லட்சம் வரையில் மோசடி செய்ததாகவும் போலீசார் தரப்பில் தெரிவித்தனர்.