திருச்சியில் தமிழ்நாடு தேசிய சட்ட பல்கலைகழகத்தின் மாணவர் சேர்க்கையில் 2022- 23 ஆம் கல்வியாண்டு முதல் அகில இந்திய ஒதுக்கீட்டில் 69 விழுக்காடு இட ஒதுக்கீட்டை பின்பற்றிட அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், அரசின் இந்த முடிவின் மூலம் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான உரிய பிரதிநிதித்துவத்தை வழங்கி சமூக நீதியை நிலை நாட்ட இயலும் என்று கூறப்பட்டுள்ளது. அதோடு மட்டுமல்லாமல் தமிழ்நாடு தேசிய சட்ட பல்கலைகழகத்தின் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான இடங்களுள் அதிகபட்சமாக 50 விழுக்காடு இடங்களை உறுதி செய்து நாட்டிற்கே முன்மாதிரியாக தமிழகம் திகழ்வதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.