கோவை மாநகர போலீசாரால் பயன்படுத்தப்பட்டு, கழிவு செய்யப்பட்ட இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களை ஏலம் விட முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஏலத்தில், 12 நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் 22 இருசக்கர வாகனங்கள் என மொத்தம் 37 வாகனங்கள் ஏலத்தில் விற்பனை செய்யப்பட உள்ளன.
வரும் செப்டம்பர் 16 ஆம் தேதி காலை 10 மணிக்கு, கோவை அவிநாசி ரோடு பி.ஆர்.எஸ் மைதானத்தில் இந்த ஏலம் நடைபெறவுள்ளது. இந்த ஏலத்திற்கு முன்னதாக, வரும் 14 ஆம் தேதி முதல் ஏலம் விடப்படும் வாகனங்கள் அனைத்தும் பொதுமக்கள் பார்வைக்காக நிறுத்தி வைக்கப்பட உள்ளன.
இந்த வாகனங்களை ஏலம் எடுக்க விரும்புபவர்கள், வாகனங்களை பார்வையிட்டு,15ம் தேதி மாலை 5 மணிக்குள் டெபாசிட் தொகையை செலுத்த வேண்டும்.
அதன்படி, இருசக்கர வாகனங்களை ஏலம் எடுக்க விரும்புபவர்கள் டெபாசிட் தொகையாக ரூ.1,000 மற்றும் நான்கு சக்கர வாகனங்களை ஏலம் எடுக்க விரும்புபவர்கள் டெபாசிட் தொகையாக ரூ.2,000 ஐ செலுத்தி தங்களது பெயர்களை பதிவு செய்து கொள்ள வேண்டும்.
அதேபோல, ஏலம் எடுப்பவர்கள் ஜி.எஸ்.டி., வரியுடன் முழுத் தொகையை 16ஆம் தேதி அன்று செலுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த ஏலம் குறித்து கூடுதல் விவரங்களுக்கு 0422 – 2241 795 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு விவரங்களை அறிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.