திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ சிகிச்சைக்கு பிறகு சிறுமியை காப்பகத்தில் ஒப்படைக்க சமூகநலத்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். குள்ளம்பட்டி: திண்டுக்கல் பாரதிபுரத்தை சேர்ந்த 47 வயது சமையல் தொழிலாளிக்கு மனைவி இறந்துவிட்டார்.
அதன்பிறகு தனது 12 வயது மகளுடன் தனியாக வசித்து வந்தார். மனைவி இறந்துவிட்டதால் மகளை தனது இச்சைக்கு பயன்படுத்தி அவருடன் உறவு வைத்துள்ளார். பின்னர் தான் வேலைக்கு செல்லும்போது அதேபகுதியை சேர்ந்த நெசவுத்தொழிலாளி கண்ணன் என்பவரது வீட்டில் விட்டுச்செல்வது வழக்கம். கண்ணனுக்கு திருமணமாகி அவரது மனைவி இறந்துவிட்டார்.
அவரது மகளும் மூளைவளர்ச்சி குறைபாடால் இறந்துவிட்டார். இதுபோன்ற நிலையில் தனது வீட்டுக்கு அடைக்கலமாக வந்த சிறுமிக்கு கண்ணனும் பாலியல் தொந்தரவு செய்து வந்துள்ளார். இதுகுறித்து தனது தந்தையிடம் சிறுமி கூறியுள்ளார். கண்ணன் தனக்கு நெருக்கமான நண்பர்.
மேலும் குடும்பத்திற்கு தேவையான உதவிகளை செய்து வருகிறார். எனவே இதுகுறித்து யாரிடமும் சொல்ல வேண்டாம் என மகளை மிரட்டியுள்ளார். இதனால் அவர் இந்த விசயத்தை யாரிடமும் கூறாமல் இருந்துள்ளார்.
இந்த சமயத்தில் சிறுமியுடன் நெருக்கமாக கண்ணன் இருந்ததை அதேபகுதியை சேர்ந்த அரிசிக்கடை உரிமையாளர் முகமதுரபீக் (57) என்பவர் பார்த்துள்ளார். தானும் சிறுமியுடன் நெருக்கமாக இருக்க அனுமதி அளிக்க வேண்டும். இல்லையெனில் இதுகுறித்து வெளியில் சொல்லிவிடுவேன் என தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து முகமதுரபீக்கும் சிறுமியை பலவந்தப்படுத்தி உறவு வைத்துள்ளார். இந்த சூழ்நிலையில் சிறுமி 3 மாத கர்ப்பிணியானார். அந்த விபரம் அவருக்கு தெரியவில்லை. இதைக்கூட அறிந்திராத தந்தையும், அவரது நண்பர்களும் தொடர்ந்து சிறுமியை பாலியல் தொந்தரவு செய்து வந்துள்ளனர்.
இதனால் உடல்நிலை பாதிக்கப்பட்ட அந்த சிறுமி சாலையில் மயங்கி விழுந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். டாக்டர்கள் பரிசோதனை செய்த போது 12 வயது சிறுமி 3 மாத கர்ப்பிணியாக இருந்ததை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து சமூகநலத்துறை அதிகாரிகள் சிறுமியிடம் விசாரணை நடத்தியபோது தந்தை உள்பட 3 பேர் தன்னை கற்பழித்ததை கூறி கதறி அழுதுள்ளார்.
இதுகுறித்து நகர் வடக்கு போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் உலகநாதன், அனைத்து மகளிர் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் வனிதா ஆகியோர் வழக்குபதிவு செய்து சிறுமியை சீரழித்த தந்தை உள்பட 3 பேரை போச்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ சிகிச்சைக்கு பிறகு சிறுமியை காப்பகத்தில் ஒப்படைக்க சமூகநலத்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது.