ஆத்தூரில் கடந்த 2 நாட்களாக பெய்த கனமழையால் ராமநாயகன் பாளையம் கல்லாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கிறது. சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள சின்ன கல்வராயன் மலை பகுதியில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
இந்நிலையில், நேற்று இரவு சின்ன கல்வராயன் மலை பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அங்குள்ள சிற்றாறு, காட்டாறு ஆறுகளில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்துள்ளது. இந்நிலையில், ஆத்தூர் ராமநாயகன் பாளையம் அருகே உள்ள கல்லாற்றில் தற்போது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அங்குள்ள சிற்றாறுகள் நிரம்பி ஆத்தூர் வசிஷ்ட நதிக்கு தற்போது தண்ணீர் அதிகளவில் வந்து கொண்டு இருக்கிறது.
இந்நிலையில், ஆத்தூர் அருகே உள்ள விநாயகபுரத்தில் கட்டப்பட்டுள்ள தடுப்பணை தற்போது நிரம்பி தண்ணீர் வெளியேறி செல்கின்றது. தண்ணீரை பார்த்த பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆத்தூர் நகர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் மழை பெய்து ஆத்தூர் வசிஷ்ட நதிக்கும், கல்லாற்றிற்கும் தண்ணீர் அதிகளவு வருவதால் அந்த பகுதியில் உள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள்.
தற்போது வசிஷ்ட நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருக்கிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள். மேலும், விவசாயிகள் தங்களுடைய பாசன வசதி பெருகும் என நம்பிக்கை அடைந்துள்ளார்கள்.