சென்னை தியாகராயநகர் காவல் மாவட்டத்தில் இன்ஸ்பெக்டர்கள் தலைமையிலான காவல் குழுவினர் பொதுமக்கள் மற்றும் மூத்த குடிமக்களை சந்தித்து ஆன்லைன் வங்கி மோசடி தொடர்பாக விழிப்புணர்வு.
சென்னை நகரில் தற்போது வயதானவர்களிடம் ஏடிஎம் மையத்தில் அவர்களது கவனத்தை திசை திருப்பியும் அவர்களது முதுமையை சாதகமாக்கிக் கொண்டும் கில்லாடி ஆசாமிகள் மோசடியில் ஈடுபட்டு பணத்தை அபேஸ் செய்து விடுகின்றனர். இதுபோன்ற குற்றச் சம்பவங்கள் சென்னை நகரம் முழுவதும் பல இடங்களில் நடைபெற்று வருகிறது. இதனால் அவற்றை தடுக்கும் வகையில் சென்னை நகரில் உள்ள வயதான முதியவர்களுக்கு அந்தந்த காவல் மாவட்ட துணைக்கமிஷனர்கள் மேற்பார்வையில் ஆன்லைன் மோசடி தொடர்பான விழிப்புணர்வு அளிக்கும்படி கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி சென்னை, தியாகராய நகர் காவல் மாவட்ட துணைக்கமிஷனர் ஹரிகிரண்பிரசாத் மேற்பார்வையில் தியாகராயநகர் காவல் மாவட்டத்தில் உள்ள மாம்பலம், கோடம்பாக்கம், அசோக்நகர், கே.கே.நகர், எம்.ஜி.ஆர் நகர், வடபழனி, வளசரவாக்கம், ராயலா நகர், தேனாம்பேட்டை, பாண்டிபஜார், தேனாம்பேட்டை ஆகிய 11 காவல் நிலைய ஆய்வாளர்கள் தலைமையில் வயதானவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. அந்தந்த காவல் நிலைய இன்ஸ்பெக்டர்கள் தங்களது காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மக்கள்கூடும் இடங்களுக்கு சென்று பொதுமக்களை சந்தித்தனர். மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு நேரில் சென்று குடியிருப்பு வாசிகள் மற்றும் மூத்த குடிமக்களை சந்தித்து, வங்கி மோசடி தொடர்பான போன் அழைப்புகள் வந்தால் உஷாராக பேச வேண்டும் என எச்சரித்தனர்.
அவர்களிடம் டெபிட்கார்டு, கிரடிட் கார்டு விபரங்களை தெரிவிக்க கூடாது எனவும், மேலும் ஓடிபி, பாஸ்வேர்டு போன்றவற்றை வங்கிகள் போனில் கேட்பதில்லை எனவும், அதை எக்காரணம் கொண்டும் யாரிடமும் பகிரக்கூடாது எனவும், வங்கி சேவை தொடர்பான தேவையில்லாத போன் அழைப்புகளை தவிர்க்குமாறு கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும் பொதுமக்கள் ஆன்லைன் வங்கி மோசடி தொடர்பான புகார்களை, சிறிதும் காலம் தாமதிக்காமல், தி.நகர் காவல் மாவட்ட துணைக்கமிஷனர் வளாகத்தில் உள்ள மாம்பலம் காவல் நிலையத்தில் செயல்படும் சைபர் கிரைம் பிரிவில் கொடுத்து பயனடையும்படியும் கேட்டுக்கொண்டனர்..