மின் இணைப்பு வழங்க ரூ.2,700 லஞ்சம் பெற்ற, உதவி மின்பொறியாளர் கைது

சின்னமனூரில் வீட்டிற்கு மின் இணைப்பு வழங்க 2 ஆயிரத்து 700 ரூபாய் லஞ்சம் பெற்ற உதவி மின்பொறியாளரை லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடியாக கைதுசெய்தனர். தேனி மாவட்டம் சின்னமனூர் அடுத்துள்ள பரமத்தேவன்பட்டியை சேர்ந்தவர் சின்ன பாண்டி. இவர் தனது தாயார் வீட்டிற்கு, புதிய மின் இணைப்பு வேண்டி, சின்னமனூர் மின்வாரிய அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார். ஆனால், விண்ணப்பத்தின் மீது நடவடிக்கை எடுக்காமல் அதிகாரிகள் காலம் தாழ்த்து வந்ததாக கூறப்படுகிறது.

இதனால், அவர் மின்வாரிய அதிகாரிகளை அணுகியபோது, உதவி மின் பொறியாளராக உள்ள பூமிநாதன் என்பவர், மின் இணைப்பு வழங்க 7 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். இதற்கு விருப்பமில்லாத சின்ன பாண்டி இது குறித்து, தேனி மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறையினருக்கு புகார் அளித்தார். அவர்கள் அளித்த ஆலோசனையின் பேரில், முன்பணமாக சின்ன பாண்டி 2 ஆயிரத்து 700 ரூபாயை, பூமிநாதனிடம் வழங்கினார். அப்போது, அலுவலகத்தில் மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி. சத்யசீலன் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார் பூமிநாதனை கையும், களவுமாக கைதுசெய்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, அவரிடம் விசாரித்து வருகின்றனர்.

Translate »
error: Content is protected !!