சென்னையில் பல லட்சம் மதிப்பிலான நெதர்லாந்து கஞ்சாவை விற்பனை செய்த சட்டக்கல்லுாரி மாணவர் உள்பட இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர். அசாமில் இருந்து லாரிபேட்டரிக்குள் கஞ்சாவை பதுக்கி கூரியரில் வரவழைத்ததாக இருவரும் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர்.
சென்னை மயிலாப்பூர் பகுதியில் மர்ம நபர்கள் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதாக மயிலாப்பூர் போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவின் பேரில் இணைக்கமிஷனர் சுதாகர், மயிலாப்பூர் துணைக்கமிஷனர் சஷாங்சாய் மேற்பார்வையில் கஞ்சா கும்பலை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. நேற்று முன்தினம் இரவு தனிப்படை போலீசார் மயிலாப்பூர் பகுதியில் ரோந்துப்பணியின் போது தீவிரமாக கண்காணித்தனர். அப்போது மயிலாப்பூர் ரயில் நிலையம் அருகில் முண்டகக்கண்ணி அம்மன் கோவில் தெருவில் இருவர் வெகுநேரமாக அங்கு கையில் பை வைத்தபடி பைக்கில் சுற்றித்திரிந்தனர். அவர்களை சந்தேகத்தின் பேரில் போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். அவர்கள் வைத்திருந்த பையை வாங்கி சோதனை நடத்தினர். உள்ளே சுமார் 3 கிலோ 400 கிராம் கஞ்சா பொட்டலங்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. அதனை பறிமுதல் செய்த போலீசார் பிடிபட்ட இருவரையும் மயிலாப்பூர் போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அவர்கள் ராயப்பேட்டை லாயிட்ஸ் ரோட்டைச் சேர்ந்த சபாசக்தி, மயிலாப்பூர் பகுதியைச் சேர்ந்த சட்டக்கல்லுாரி மாணவர் யாசர் ஹனிபா என்பதும் தெரியவந்தது.
அது குறித்து போலீசார் தரப்பில் கூறுகையில், ‘‘சட்டக்கல்லுாரி மாணவரிடம் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா நெதர்லாந்து நாட்டில் விற்பனை செய்யப்படும் ஐடெக் போதை கஞ்சா எனவும் 1 கிராம் கஞ்சா ரூ. 15 ஆயிரத்திலிருந்து ரூ. 20 ஆயிரம் வரை சர்வதேச சந்தையில் விற்கப்படுகிறது. அசாம் மாநிலத்தில் இருந்து லாரி பேட்டரிகளை கூரியரில் அனுப்பும் போது அதற்குள் பதுக்கி வைத்து பெங்களூருக்கு கொண்டுவரப்படுகின்றன. அங்கிருந்து தமிழகத்தில் சென்னை உள்பட தென்மாநிலங்களுக்கும் லாரி பேட்டரியில் மறைத்து வைக்கப்பட்டு கூரியர் சர்வீஸ் கடத்திக் கொண்டு வந்ததாக யாசர் ஹனிபாவும், சபாசக்தியும் அதிர்ச்சித்தகவல்களை வெளியிட்டனர். கல்லுாரி மாணவரான யாசர் அனிபா இத்தகைய நெதர்லாந்து பட் எனப்படும் உயர்ரக கஞ்சாவை தன்னுடன் கல்லுாரியில் படிக்கும் மாணவர்களுக்கு சப்ளை செய்து வந்ததாக தெரிவித்துள்ளார். யாசரிடம் இருந்து கஞ்சா கடத்த பயன்படுத்தப்பட்ட லாரி பேட்டரிகள், பைக்குகள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.