தமிழ் திரையுலகின் நிகரற்ற பாடகர் என்று அனைவராலும் போற்றப்பட்ட எஸ்பி பாலசுப்பிரமணியம் இன்று காலை மாரடைப்பால் மரணமடைந்தார். அவரது உடல் தனியார் ஆஸ்பத்திரியில் இருந்து நுங்கம்பாக்கம் காம்தார் நகரில் உள்ள அவரது இல்லத்துக்கு மாலை 4 மணியளவில் கொண்டு செல்லப்பட்டது.
அங்கு திரையுலகம் மற்றும் பொதுமக்கள் திரளாக வந்து எஸ்பிபியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். இதனால் அங்கு கூட்டநெரிசல் ஏற்பட்டதால் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. அதனையடுத்து இரவு 11 மணியளவில் நுங்கம்பாக்கம் இல்லத்தில் இருந்து தாமரைப்பாக்கம் பண்ணை வீட்டிற்கு எஸ்பிபியின் உடல் கொண்டு செல்லப்பட்டது. தாமரைப்பாக்கத்தில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்கள் அஞ்சலி செலுத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 2 கிலோ மீட்டருக்கு தொலைவில் வாகனங்கள் தணிக்கை செய்த பின்னரே அனுமதிக்கப்படவுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவித்தனர். முக்கிய பிரமுகர்கள் மட்டும் வரிசையில் நின்று அமைதியான முறையில் அஞ்சலி செலுத்த ஏற்பாடு நடைபெற்று வருகிறது. திருவள்ளூர் எஸ்பி அரவிந்தன் தலைமையில் 4 டிஎஸ்பிக்கள் தலைமையில் 300க்கும் மேற்பட்ட போலீசார் தாமரைப்பாக்கம் எஸ்பிபியின் பண்ணை வீட்டு குவிக்கப்பட்டு வருகின்றனர்.