சட்டவிரோதமாக வெளிநாட்டில் சொத்துக்களை பதுக்கிய விவகாரம் தொடர்பாக பிரபல பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் இன்று டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கமளித்தார்.கடந்த 2016-ம் ஆண்டு சட்டவிரோதமாக வெளிநாடுகளில் முதலீடு செய்துள்ளவர்களின் பட்டியல் பனாமா ஆவணம் என்ற பெயரில் வெளியானது. இதில் பல நாடுகளில் உள்ள முக்கிய பிரமுகர்களின் பெயர்கள் இடம்பெற்றிருந்தன. இதில் நடிகை ஐஸ்வர்யா ராய், அமிதாப் பச்சன் உள்ளிட்ட 500 இந்தியர்களின் பெயர்களும் குறிப்பிடப்பட்டிருந்தன. குறிப்பாக நடிகை ஐஸ்வர்யா ராய் வெளிநாடுகள் மற்றும் விர்ஜின் தீவில் சட்டவிரோதமாக சொத்துக்களை வாங்கி குவித்துள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக அந்நிய செலாவணி மேலாண்மை சட்டம் பகுதி 37-ன் கீழ், நடிகை ஐஸ்வர்யா ராய் ஆஜாராக வேண்டும் என அமலாக்கத்துறை இரண்டு முறை சம்மன் அனுப்பிய நிலையில் இன்று காலை மீண்டும் சம்மன் அனுப்பியது. இன்று சம்மன் அனுப்பியுள்ளதாகவும், இது தொடர்பாக அவர் 15 நாட்களுக்குள் பதிலளிக்க வேண்டும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.