அமெரிக்கா வாகன நிறுவனமான ஃபோர்டு இந்தியாவில் உள்ள உற்பத்தி ஆலைகளை மூட முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஃபோர்டு வாகன உற்பத்தி மிகவும் குறைந்து வருவதால் ஏற்படும் நஷ்டம் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களை மட்டும் தொடர்ந்து விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளதாக போர்டு நிறுவனம் தெரிவித்துள்ளது. சுமார் 2 பில்லியன் டாலர் இழப்பு உள்ளிட்ட பிரச்சினை காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக ஃபோர்டு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் ஃபோர்டு உற்பத்தி ஆலை மூடப்பட்டால் 4000 தொழிலாளிகள் வேலையிழக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னையை அடுத்த மறைமலைநகரில் உள்ள போர்டு நிறுவனம் மூடப்படுவது தொடர்பாக முதலமைச்சர் முக.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார். தலைமைச் செயலகத்தில் இன்று காலை 11.30 மணி அளவில் ஆலசோனை கூட்டம் நடக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆலோசனைக்குப் பிறகு முக்கிய விவரங்கள் வெளியிடப்படும் என்று தெரிகிறது.