அ.தி.மு.க. ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்தவர் கே.டி.ராஜேந்திரபாலாஜி. ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக ரூ.3 கோடி மோசடி செய்த புகாரின் பேரில் கடந்த ஆண்டு நவம்பர் 15-ந்தேதி விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறை ராஜேந்திர பாலாஜி மீது வழக்குப்பதிவு செய்தனர்.
இதையடுத்து அவரை கைது செய்ய போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டனர். போலீசார் தேடுவதை அறிந்ததும் தலைமறைவானார். அவரை பிடிக்க 10க்கும் மேற்பட்ட தனிப்படைகள் அமைக்கப்பட்டன. ராஜேந்திர பாலாஜியை பல்வேறு இடங்களில் தேடி வந்தனர்.
இந்நிலையில் ராஜேந்திர பாலாஜி கர்நாடக மாநிலம் ஹாசன் பகுதியில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இன்று அவரை கைது செய்தனர். வாகனத்தை பார்த்ததும் தப்பியோட முயன்ற அவரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ராஜேந்திர பாலாஜி தமிழகம் அழைத்து வரப்படுகிறார்.