காவல் நிலையங்களில் இருப்பு சாட்சிகளை பயன்படுத்தி குற்ற வழக்குகளின் விசாரணை நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்- நீதிமன்றம் உத்தரவு.

திருவொற்றியூர் காவல் நிலையத்தின் முதல் நிலை காவலர் செல்வகுமார் என்பவர் கடந்த 2015 ஆம் ஆண்டு வண்ணாரப்பேட்டை பகுதியில் கடைக்கு பால் வாங்க சென்ற போது வாசுதேவன், சரண் ராஜ், ரமேஷ், சண்முகம் ஆகிய நாலு பேரும் உருட்டு கட்டை உள்ளிட்ட ஆயூதங்களால் தாக்கியதாக புது வண்ணாரபேட்டை காவல் நிலையத்தில் வழக்கு பதியபட்டது.

 

இந்த வழக்கை விசாரித்த சென்னை ஜார்ஜ் டவுன் 15வது பெருநகர குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முரளி கிருஷ்ணன் ஆனந்தன், இருப்பு சாட்சிகள் பிறழ் சாட்சிகளாக மாறும் போது அவர்களை குறுக்கு விசாரணை செய்தபோது, காவல் நிலையத்தில் அதிகார பூர்வமாக வெளிவராத பல சம்பவங்கள் வெளி வந்துள்ளதாகவும், வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் இருப்பு சாட்சிகளை வைத்திருக்கும் சம்பவங்களும்,  அவர்களை எவ்வாறு விசாரணைக்கு பயன்படுத்துகிறார்கள் என்பதை இந்த வழக்கு வெளிச்சம் போட்டு காட்டியுள்ளதாக  தெரிவித்தார்.

 

மேலும், காவல்துறை தரப்பில் அளிக்கப்பட்ட சாட்சிகள் முழுமையாக இல்லை எனவும், காவல் நிலையங்களில் அதிகாரபூர்வமற்ற முறையில் பணியாற்றும் பணியாளர்கள் சிலர் இருப்பு சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ளதாகவும், இது போன்ற சில கசப்பான சம்பவங்கள் நடைபெற்று வருவதாகவும் நீதிபதி கருத்து தெரிவித்தார்.

 

காவல் நிலையங்களில் உள்ள இருப்பு சாட்சிகளை பயன்படுத்த கூடாது என்பதற்கான உறுதியான சில நடவடிக்கை எடுக்க வேண்டும்  என சென்னை மாநகர காவல் ஆணையருக்கு  உத்தரவிட்ட நீதிபதி, குற்றம் சாட்டபட்டவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்படாததால் அவர்களை விடுதலை செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

 

Translate »
error: Content is protected !!