திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மிதமான மழையும் திடீரென கனமழை பெய்து வந்தது.
இந்தநிலையில் நேற்று காலை முதலே லேசான மழை கொடைக்கானல் நகர்ப் பகுதிகள் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் பெய்து வந்தது. இதனைத் தொடர்ந்து நேற்று மாலை தொடர்ந்த மழையானது கனமழையாக மாறி அப்சர்வேட்டரி இந்திரா நகர், நாயுடுபுரம் , செண்பகனூர் , அண்ணா சாலை, வில்பட்டி பள்ளங்கி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக கனமழை பெய்தது.
இதனால் சாலைகள் முழுவதும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தொடர்ந்து பெய்த கனமழையால் கொடைக்கானல் இந்திராநகர் பகுதியில் நேற்று இரவு தடுப்பு சுவர் சரிந்து குடியிருப்பு மேல் விழுந்துள்ளது. இதனால் குடியிருப்பு முழுவதுமாக சேதமடைந்து காணப்படுகிறது. தொடர்ந்து அதிர்ஷ்டவசமாக குடியிருப்பில் இருந்தவர்கள் தப்பித்தனர்..தொடர்ந்து பெய்து வரும் மழையால் கொடைக்கானல் மலைச்சாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆங்காங்கே லேசான மண் சரிவுகள் ஏற்பட்டு வருகிறது.