காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் சுங்கச்சாவடியில் இயங்கி வரும் தனியார் செல்போன் உதிரி பாகங்கள் தயாரிக்கும் நிறுவனத்தில், 5,000க்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் பூந்தமல்லி அருகே உள்ள விடுதியில் தங்கி வேலை செய்து வருகின்றனர்.
இந்நிலையில், பெண் ஊழியர்கள் தங்கியிருந்த விடுதியில் கடந்த புதன்கிழமை வழங்கப்பட்ட உணவு தரமற்றதாக இருந்துள்ளது. இந்த உணவை சாப்பிட்ட 400க்கும் மேற்பட்ட பெண்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட 400-க்கும் மேற்பட்ட பெண்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சிகிச்சை பெற்று வந்த பெண்களில் பெரும்பாலானோர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். ஆனால் சில பெண்கள் இன்னும் டிஸ்சார் செய்யப்படவில்லை. தனியார் செல்போன் உதிரி பாகங்கள் தயாரிக்கும் நிறுவனம் சார்பில் எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை.
இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 8 பெண்களின் நிலை என்பது குறித்து எந்த தகவலும் தெரியாததால் நிர்வாகத்திற்கும், ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து நேற்று இரவு 12 மணியளவில் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் 8 மணி நேரத்திற்கும் மேலாக பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் சென்னை-பெங்களூரு சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களை சமரசம் செய்து போக்குவரத்தை சரிசெய்யும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
இதையடுத்து, போராட்ட இடத்திற்கு நேரடியாக வந்த மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி, பெண் ஊழியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது பேசிய மாவட்ட ஆட்சியர், “காஞ்சிபுரம் தொழிற்சாலையில் 2 பெண் ஊழியர்கள் உயிரிழந்ததாக வதந்தி பரவி வருகிறது. மயங்கி விழுந்த புகைப்படம் உயிரிழப்பு என வதந்தி பரவியது. உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாக கூறப்படும் 4 பேரும் நலமுடன் உள்ளனர். விடுதி காப்பாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது” என்றார்.
மேலும் அவர் கூறியது, மற்ற ஊழியர்கள் அனைவரும் நலமாக உள்ளனர். டீஹைட்ரேஷன் ஆகி அவர்களுக்கு உடல் உபாதை ஏற்பட்டிருந்திருக்கிறது. அனைவருக்கும் முறையான சிகிச்சை அளிக்கப்பட்டு தற்போது நலமாக உள்ளனர். பாதிக்கப்பட்ட 115 பேரும் தற்போது நலமாக உள்ளனர்.
விடுதிகளில் இனிமேல் இதுபோன்று நடக்காமல் இருக்க, விரைவில் தனி குழு அமைக்கப்படும். இந்த நிலையில் தரமற்ற உணவு வழங்கியதாக விடுதி வார்டன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. என்றார் கூறியுள்ளார்.
மேலும், மாவட்ட ஆட்சியர் 2 பெண்களுடன் காணொலி காட்சி மூலம் பேசி போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களிடம் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் காண்பித்தார். இதையடுத்து, சுமார் 12 மணி நேரம் நடைபெற்ற போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.