கேரளாவில் பலத்த மழை காரணமாக பிளஸ்-1 தேர்வு ஒத்தி வைக்கப்படுவதாக அமைச்சர் சிவன் குட்டி அறிவித்துள்ளார். கேரளாவில் பெய்து வரும் கனமழை காரணமாக பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு உள்ளது. நிலச்சரிவிலும், மழை வெள்ளத்திலும் சிக்கி 23 பேர் பலியாகி உள்ளனர். மேலும், பல மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் ரெட், ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளது. கனமழை, வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு என மாநிலம் முழுவதும் மோசமான சூழல் ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து நிலச்சரிவில் சிக்கியிருக்கும் மக்களை மீட்கும் பணியில் ராணுவத்தின் மெட்ராஸ் படைப்பிரிவை சேர்ந்த வீரர்கள் இரவு, பகலாக ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து, கேரள பொது கல்வித்துறை அமைச்சர் சிவன் குட்டி திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது, கேரளாவில் பலத்த மழை பெய்து வருவதால் இன்று நடைபெறுவதாக இருந்த பிளஸ்-1 தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது என்றும், தேர்வு நடத்தப்படும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.