இந்தியாவில் பட்டாசு உற்பத்தி செய்யும் தொழிலாளர்கள் விவரங்கள் மத்திய அரசிடம் இல்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கடந்த 3 ஆண்டுகளில் 26 ஆயிரம் மெட்ரிக் டன் இந்திய பட்டாசுகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. நாட்டில் பட்டாசு உற்பத்தி செய்யும் தொழிலாளர்களுடைய எண்ணிக்கை மத்திய அரசு கணக்கெடுத்துள்ளதா? என்றும் கடந்த மூன்று ஆண்டுகளில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட இந்திய பட்டாசுகளில் மதிப்பு குறித்து மாநிலங்களவையில் உறுப்பினர் ஒருவர் கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு பதிலளித்துள்ள மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை இணை அமைச்சர் சோம் பிரகாஷ், 2014ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வெளிநாட்டு பட்டாசுகளை இறக்குமதி செய்வதற்கு மத்திய அரசு தடை விதித்தது; இதனால் சமீபத்தில் பட்டாசு இறக்குமதி செய்வதற்கான உரிமம் யாருக்கும் வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மிக முக்கியமாக நாட்டில் பட்டாசு உற்பத்தி செய்யும் தொழிலாளர்களுடைய விவரங்களை மத்திய அரசு சேகரித்து வைக்கவில்லை என நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் 2019,2020,2021 மற்றும் 2022 ஆகிய வருடங்களில் 13 ஏற்றுமதி நிறுவனங்களுக்கு பட்டாசு ஏற்றுமதி செய்வதற்கான உரிமம் மத்திய அரசால் வழங்கப்பட்டுள்ளது.
இந்தியாவிலிருந்து ஸ்ரீலங்கா,பங்களாதேஷ் மற்றும் போலாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு 236.27 லட்சம் மதிப்புள்ள 26,812 மெட்ரிக் டன் இந்திய பட்டாசுகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது என மத்திய அரசின் எழுத்துப்பூர்வ பதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.