திருச்செந்தூர் கோவிலில் பங்குனி உத்திரத் திருவிழா

 

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு நேற்று நள்ளிரவு சுவாமி  குமரவிடங்க பெருமானுக்கும் வள்ளி அம்பாளுக்கும் திருக்கல்யாண நிகழ்ச்சி வைதீக முறைப்படி நடைபெற்றது.  இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

முருகப்பெருமானின் இரண்டாம் படைவீடாக புகழ்பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா நேற்று கொண்டாடப்பட்டது.  இதனையொட்டி அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.  மாலை சுவாமி தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளி மேலே கோவிலிலுள்ள வள்ளி  அம்பாளுக்கு காட்சி அளிக்கும் நிகழ்ச்சியும் பின்னர் சுவாமியும்  அம்பாளும்  தோள் மாலை மாற்றும் வைபவமும் நடைபெற்றது.

அதனை அடுத்து பங்குனி உத்திரத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாண வைபோகம் நள்ளிரவு  நடந்தது.  108 மகாதேவர் சன்னதி முன்பு சுவாமி குமரவிடங்க பெருமானும் வள்ளி அம்பாளும் எழுந்தருள  சீர் வரிசைகளுடன் வைதீக முறைப்படி மேளதாளம் மந்திரங்கள் முழங்க திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

 

Translate »
error: Content is protected !!