கனிம வளங்களை ஏற்றிச்சென்ற 18 லாரிகளை மடக்கி பிடித்தனர் போலீசார்

ஆலங்குளம் தாலுகா பகுதியை சுற்றிலும் பத்துக்கும் மேற்பட்ட கல் குவாரிகளிலிருந்து, கேரளவின் பல்வேறு பகுதிகளுக்கு நாள்தோறும் 500க்கும் மேற்பட்ட லாரிகள் மூலம் எம் சேன்ட் மற்றும் கற்கள் அதிக அளவில் கொண்டு செல்லப்படுகிறது. ஆலங்குளம் வழியாக நாள்தோறும் கனிம வளங்களை ஏற்றி செல்லும் பிரம்மாண்ட  லாரிகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

ஏற்கனவே கல்குவாரி அமைந்திருக்கும் மருதம்புத்தூர், புதுப்பட்டி, அனைந்தநாடார்பட்டி உள்ளிட்ட கிராம மக்கள் தங்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளதாக கூறி தங்கள் பகுதியில் உள்ள கல் குவாரிகளை மூட வேண்டுமெனவும், புதிய குவாரிகள் அமைக்க அனுமதி வழங்க கூடாது எனவும் பல ஆண்டுகளாக மாவட்டஆட்சியர், வட்டாட்சியர் உள்ளிட்டோருக்கு மனுக்களை அளித்துள்ளனர்.

இது தொடர்பாக அரசுத் துறையின் சார்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருந்து வருவதாகவும், அண்மையில் ஆலங்குளத்தில் புதுப்பட்டி, காசிநாதபுரம் பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இணைந்து மாபெரும் போராட்டத்தை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஆலங்குளம் வழியே கல் மற்றும் எம் சேன்ட் ஏற்றி அதிக வேகத்துடன் சென்ற 18 லாரிகளை ஆலங்குளம் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் போலீசார் மடக்கி பிடித்து விசாரித்த போது,  இதில் அனைத்து லாரிகளுமே அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக பாரத்துடன் கனிம வளங்களை ஏற்றி சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து 18 லாரிகளுக்கும் மொத்தம் ரூ. 56 ஆயிரம் அபராதம் பிரித்து அதிரடி நடவடிக்கையில் இறங்கினர். ஆலங்குளம் போலீசாரின் இந்த அதிரடி நடவடிக்கைக்கு ஆலங்குளம் பகுதி மக்கள் சார்பில் பாராட்டுகள் குவிகின்றன.

 

Translate »
error: Content is protected !!