இனிமேல் தவறான வழியை கைவிடுவேன் என கவுன்சிலிங்கில் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் தெரிவித்துள்ளார்.
நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் கடந்த சில நாட்களுக்கு முன்பு சொகுசுக் கப்பலில் நடந்த விருந்தில் போதைப்பொருள் பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில் மும்பையில் உள்ள பாதுகாப்பு மிக்க ஆர்தர் ரோடு சிறையில் உள்ள ஆர்யன் கானின் ஜாமீன் மனு மீதான உத்தரவு வரும் 20ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது. நடிகர் சல்மான்கானை சிறையில் இருந்து வெளியில் எடுத்த மூத்த வழக்கறிஞர் அமித் தேசாய் ஆர்யனுக்காக வாதாடி வருகிறார்.
எனவே வரும் 20ம் தேதி எப்படியும் ஜாமீன் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் ஆர்யன் கான் இருக்கிறார். இந்த நிலையில், எதிர்காலத்தில் இதுபோன்ற காரியத்தில் அவர்கள் ஈடுபடக்கூடாது என்பதற்காக போதைப்பொருள் தடுப்பு மும்பை மண்டல இயக்குனர் சமீர் வாங்கடே மற்றும் சமூக சேவகர்கள் சிறையில் ஆர்யனுக்கும் அவருடன் கைது செய்யப்பட்டவர்களுக்கும் கவுன்சிலிங் கொடுத்தனர். அப்போது கவுன்சிலிங்கின்போது சிறையில் இருந்து வெளியில் சென்றதும் ஏழைகளின் நலனுக்காக பாடுபடுவேன் என்றும், தனது பெயருக்கு களங்கம் ஏற்படும் வகையில் இனி நடந்து கொள்ள மாட்டேன் என்றும், தவறான வழியைக் கைவிடுவேன் என்று ஆர்யன் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.