தெலுங்கு சினிமாவின் பிரபல செய்தி தொடர்பாளர் மற்றும் இளம் தயாரிப்பாளரான மகேஷ் கோனேரு மாரடைப்பால் இன்று உயிரிழந்துள்ளார். இவரது இழப்பு தெலுங்கு திரையுலகத்தையும், ரசிகர்களையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இவர், நடிகர்கள் ஜூனியர் என்டிஆர் மற்றும் நந்தமூரி பாலகிருஷ்ணாவின் தனிப்பட்ட செய்தி தொடர்பாளராக இருந்து வந்தார். இவர் ஒரு பத்திரிகையாளராக தனது வாழ்க்கையை தொடங்கினார். பின்னர் சினிமா பிரபலங்களின் செய்தி தொடர்பாளராக உருவெடுத்தார்.
கடந்த 2019ம் ஆண்டு மகேஷ் நந்தமூரி கல்யாணராமின் ‘118.’படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமானார். பின்னர் ‘திம்மருசு’ என்ற படத்தையும் தயாரித்தார். தற்போது ‘சபகு நமஸ்காரம்’ மற்றும் ‘போலீஸ் வரி ஹெச்சாரிகா’ ஆகிய இரண்டு படங்களை தயாரித்து வந்திருந்தார். இந்நிலையில், அவருக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். இவரது மறைவிற்கு தெலுங்கு திரையுலகப் பிரபலங்கள் பலரும் அவர்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.