சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் , சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ய மென்பொறியாளர்கள் மற்றும் கைப்பற்றப்பட்ட தங்க நகை மற்றும் தங்க பிஸ்கட்டுகளை ஆய்வு செய்ய நகை மதிப்பீடியாளர்கள் வருகை தந்துள்ளனர்.
சினிமா பைனான்சியர் அன்புசெழியன் வீடு அவரது உறவினர்கள் வீடு மற்றும் அலுவலகங்கள் , திரையரங்கு , ஹோட்டல் உள்ளிட்ட மதுரையில் 20க்கும் மேற்பட்ட இடங்களில் நேற்று முதல் இன்று 2 வது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனையில் கணக்கில் வராத தங்க நகைகள் மற்றும் தங்க பிஸ்கட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ள தாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
அதனை மதிப்பீடு செய்ய வருமானவரித்துறையில் அங்கீகாரம் பெற்ற நகை மதிப்பீட்டாளர்கள் வரவழைக்கப்பட்டு மதுரை தெப்பக்குளம் பகுதியில் உள்ள அன்புச்செழியனின் சகோதரர் அழகர்சாமி வீடு மற்றும் மதுரை காமராஜர் சாலையில் உள்ள அன்புச்செழியன் வீடுகளில் கைப்பற்றப்பட்ட நகைகள் தரம் மற்றும் மதிப்புகள் குறித்து கணக்கிடப்பட்டு வருகின்றது.
மேலும் சோதனை நடைபெறும் இடங்களில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளில் பழைய காட்சிகளை ரெக்கவரி செய்து பார்ப்பதற்காக மின் பொறியாளர்களும் வருகை தந்து அவர்களது பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இந்த சோதனையில் ஈடுபட்டுள்ள வருமானவரித்துறை அதிகாரிகள் சில ஆவணங்களை கைப்பற்றி விசாரணைக்காக எடுத்துச் செல்கின்றனர்.