தூத்துக்குடியில் கனமழை – வெள்ள அபாய எச்சரிக்கை

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. அதனால் பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்கின்றது. சென்னையில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையின் காரணமாக அங்குள்ள தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றது. இப்பகுதிகளை நேரில் பார்வையிட்ட தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீட்புப் பணிகளை துரிதமாக நடத்த உத்தரவிட்டுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று காலை 10:30 மணிக்கு லேசான தூறலுடனே மழை தொடங்கியது. சில மணி நேரத்திலேயே கனமழையாக மாறி பெய்து வருகிறது. ஏற்கனவே பெய்த கன மழை காரணமாக தூத்துக்குடி மாநகராட்சியின் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியிருந்தது. அதனை வெளியேற்றும் பணிகள் மந்தமாக நடைபெற்று வந்தது. தற்போது பெய்து வரும் கனமழையின் காரணமாக மீட்பு பணிகளில் சுணக்கம் காணப்படுகின்றது.

 

மேலும் குடியிருப்பு பகுதிகளில் வெள்ள நீர் சூழும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது. சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ள நீர் மற்றும்  சூரிய வெளிச்சம் குறைந்து இருள் சூழ்ந்து காணப்படுவதால் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டு ஊர்ந்தபடி செல்கின்றன. இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் மழை நீடிப்பதால் தாமிரபரணி ஆற்றுப்படுகை பகுதிகளை வெள்ளநீர் சூழும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே தாமிரபரணி ஆற்றுப்படுகை மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு அங்கு வசிக்கும் மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

 

முகாம்களில் தங்கியிருக்கும் பொதுமக்களுக்கு தேவையான உதவிகளை செய்ய அனைத்து துறை அதிகாரிகளுக்கும் மாவட்ட ஆட்சித்தலைவர் செந்தில்ராஜ் உத்தரவிட்டுள்ளார். மேலும் கனமழையால் சேதமடைந்த நெல், வாழை, மக்காச்சோளம் உள்ளிட்ட பாசன பகுதிகளில் பயிர்களை பார்வையிட்ட அவர், சேத விவரம் குறித்து விவசாயிகளிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார். மேலும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்படைத்த பயிர்களுக்கு பயிர்காப்பீடு மற்றும் இழப்பீடு பெற்றுத்தரவும் துறைரீதியாக உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் அதிகாரிகளிடம் கூறினார்.

Translate »
error: Content is protected !!