அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி மூலம் உரையாடல்…இருதரப்பு உறவை மேம்படுத்த உறுதி

வாஷிங்டன்,

அமெரிக்க அதிபர் ஜோ பிடென், பிரதமர் நரேந்திர மோடியுடன் தொலைபேசி வாயிலாக உரையாடியபோது, இருதரப்பு உறவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல உறுதியளித்தனர்.

அமெரிக்காவின் 46 வது ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர், ஜோ பிடென் இதுவரை ஒன்பது வெளிநாட்டு தலைவர்களுடன் தொலைபேசி அழைப்பை மேற்கொண்டார். பாரம்பரியமாக புதிய அமெரிக்க ஜனாதிபதி இரண்டு அண்டை நாடுகளான கனடா மற்றும் மெக்ஸிகோவின் தலைவர்களுக்கு முதலில் தொலைபேசி அழைப்புகளை மேற்கொள்வது வழக்கம்.

அதன்பிறகு, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, தென் கொரியா மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட நெருங்கிய அமெரிக்க நட்பு நாடுகளின் தலைவர்களை பிடென் அழைத்து பேசினார். இடையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை அழைத்துபேசிய போது, அணு ஆயுதப் குறைப்புக்கான ஒப்பந்தத்தை இன்னும் ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிக்க ஒப்புக்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அண்டை நாடுகள் மற்றும் முக்கிய நேட்டோ நட்பு நாடுகளுக்கு அப்பால் ஜோ பிடென் பேசிய முதல் வெளிநாட்டுத் தலைவர் மோடி தான் என்பது குறிப்பிடத்தக்கது. இது பிடென் நிர்வாகம் இந்தியாவுடனான உறவில் கொண்டுள்ள முக்கியத்துவத்தை பிரதிபலிக்கிறது என பாதுகாப்பு வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கொரோனா தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் வெற்றி பெறுவதற்கும், காலநிலை மாற்றம் தொடர்பான தங்கள் உறுதியை புதுப்பிப்பதற்கும், இரு நாடுகளின் மக்களுக்கும் பயனளிக்கும் வகையில் உலகப் பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்பவும் மோடியும் பிடெனும் இணைந்து பணியாற்ற உறுதியளித்தனர்.

மேலும் இரு தலைவர்களும் ராணுவ ஆட்சிக் கவிழ்ப்பு நடந்துள்ள மியான்மரில் சட்டம் மற்றும் ஜனநாயக செயல்முறை உறுதிப்படுத்தப்பட ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் எனக் கூறியுள்ளது. பிடென் மற்றும் மோடி ஆகியோர் உலகளாவிய சவால்களில் இணைந்து பணியாற்ற ஒப்புக்கொண்டனர்.

அத்துடன் உலகளாவிய பயங்கரவாதத்திற்கு எதிராக ஒன்றாக நிற்கவும், பிராந்திய ஒருமைப்பாட்டு ஒத்துழைப்புக்கும் இருநாட்டுத் தலைவர்களும் ஒப்புக் கொண்டனர் என்று வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Translate »
error: Content is protected !!