பாகிஸ்தானில் ஆப்கானிஸ்தான் தூதர் மகள் கடத்தப்பட்டதற்கான ஆதாரங்கள் எதுவும் தங்கள் விசாரணையில் கிடைக்கவில்லை என்று பாகிஸ்தான் உள்துறை அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகளின் வன்முறை அதிகரித்து வருவதன் காரணமாக பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் ஆகிய இரண்டு நாடுகளுக்கு இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டு வருகின்றன. தாலீபான் பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் புகலிடம் அளித்து வருவதாக ஆப்கானிஸ்தான் குற்றம் சாட்டி வருகிறது. இந்நிலையில் பாகிஸ்தானில் ஆப்கானிஸ்தான் தூதர் நஜிப் அலிகேல் 27 வயது மகள் மர்ம நபர்களால் கடத்தி சித்ரவதைக்கு ஆளாக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கடந்த வெள்ளிக்கிழமை பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள தனது வீட்டுக்கு காரில் அவர் திரும்பிய போது மர்ம நபர்கள் சிலர் அவரை வழிமறித்து கடத்தி சென்றனர். பின்னர் அவர்கள் சில்சிலா அலிகேலை அடித்து உதைத்து சித்ரவதை செய்தனர். கடத்தப்பட்ட சில மணி நேரங்களுக்குப் பின்னர் அவர்கள் சில்சிலா அலிகேலை சாலையில் விட்டுவிட்டு சென்றனர். தனது மகள் கடத்தப்பட்டு சித்ரவதைக்கு ஆளாக்கப்பட்டது.
மனிதாபிமானமற்ற செயல் என கண்டனம் தெரிவித்த தூதர் நஜிப் அலிகேலின், தற்போது தனது மகள் நலமாக இருப்பதாக தெரிவித்துள்ளார். நாட்டில் தூதர்கள் மற்றும் குடும்பத்தினரின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்குமாறு பாகிஸ்தானை ஆப்கானிஸ்தான் வலியுறுத்தியுள்ளது. இதனிடையே இந்த கடத்தல் சம்பவத்தில் தொடர்புடைய நபர்களை 48 மணி நேரத்துக்குள் கைது செய்ய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் உத்தரவிட்டு இருந்தார். அது தொடர்பாக விசாரணை நடத்திய பாகிஸ்தான் உள்துறை அமைச்சகம், ‘‘ஆப்கானிஸ்தான் தூதர் மகள் கடத்தப்பட்டதற்கான எந்த ஆதாரங்களும் கிடைக்கவில்லை என்று தெரிவித்துள்ளது.