இஎம்ஐக்கு போலி ஆவணம் கொடுத்து இருசக்கர வாகனம் வாங்கிய 3 பேர் கைது

இஎம்ஐக்கு போலி ஆவணம் தயாரித்து தவணை முறையில் இருசக்கர வாகனம் வாங்கிய மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.

நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 28). சென்னை திநகரில் தங்கியிருந்து தனியார் மருந்து நிறுவனத்தில் ரெப்ரெசன்டேட்டிவ்வாக பணிபுரிந்து வருகிறார். போரூரில் உள்ள பிரபல செல்போன் நிறுவனத்திற்கு சென்று மாத தவணையில் செல்போன் வாங்கியுள்ளார். அதற்காக அவரது ஆதார் கார்டு மற்றும் வங்கி விவரங்களை சமர்ப்பித்துள்ளார். இந்நிலையில், ராஜேஷின் வங்கிக் கணக்கிலிருந்து திடீரென பணம் எடுக்கப்பட்டிருந்தது. அது தொடர்பாக அவர் வங்கிக்கு சென்று விசாரித்ததில், ராஜேஷின் பெயரில், மதுரவாயலில் உள்ள இருசக்கர வாகன ஷோரூமில் மாத தவணையில் இருசக்கர வாகனம் வாங்கியதற்காக மாத தவணை பிடித்தம் செய்யப்பட்டதாக தெரிவித்தனர். அது தொடர்பாக ராஜேஷ் மதுரவாயல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன்பேரில் மதுரவாயல் போலீசார் அம்பத்துார் சைபர்கிரைம் போலீசாரின் உதவியுடன் விசாரணை நடத்தியதில் அதிர்ச்சித்தகவல்கள் வெளிவந்தன.

போரூர் செல்போன் நிறுவனத்தில் உள்ள லோன் பிரிவில் பணி செய்யும் ஐசிஐசிஐ வங்கி பிரதிநிதி விக்னேஷ் என்பவர் இந்த மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. விக்னேஷ் தனது நண்பர் மதுரவாயலைச் சேர்ந்த தனது நபர் மற்றொரு ராஜேஷ் என்பவருடன் சேர்ந்து புகார் அளித்த ராஜேஷ் கொடுத்த ஆவணங்களின் நகல்களை கொண்டு போலி ஆவணங்கள் தயாரித்துள்ளார். அவற்றை மதுரவாயலில் உள்ள இருசக்கர வாகன ஷோரூமில் சமர்ப்பித்து மாத தவணையில் இருசக்கர வாகனம் வாங்கியுள்ளனர். அதனால் அதற்காக தொகை புகார்தாரர் ராஜேஷின் வங்கி கணக்கில் பிடித்தம் செய்யப்பட்டதும் தெரியவந்தது. அதனையடுத்து போலி ஆவணங்கள் சமர்ப்பித்து மோசடியில் ஈடுபட்ட குற்றவாளிகள் ராஜேஷ் (வயது 31), வானகரம் விக்னேஷ் (23) மற்றும் அவர்களுக்கு உடந்தையாக இருந்த திருவேற்காட்டைச் சேர்ந்த லோகேஷ் (31) ஆகிய மூவரையும் கைது செய்தனர். மேலும் விசாரணையில் குற்றவாளிகள் இதுபோல பலபேரின் ஆவணங்களை கொண்டு போலி ஆவணங்கள் சமர்ப்பித்து இருசக்கர வாகனங்களை வாங்கி, பின்னர் பாதி விலைக்கு விற்று மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. அது தொடர்பாக அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Translate »
error: Content is protected !!