இங்கிலாந்து – இந்தியா இடையிலான விமான போக்குவரத்து சேவை இன்று முதல் மீண்டும் தொடங்கியுள்ளது.
இங்கிலாந்தில் கண்டறியப்பட்ட புதிய வகை கொரோனா பல்வேறு நாடுகளுக்கு பரவியது. இதையடுத்து, அந்நாட்டுடனான விமான சேவையை பல்வேறு நாடுகளும் நிறுத்தின. இந்தியாவும் கடந்த 23- ஆம் தேதி இங்கிலாந்து உடனான விமான சேவையை நிறுத்தியது.
இந்த நிலையில், மத்திய அரசு ஏற்கனவே அறிவித்த படி 15 நாள்களுக்கு பிறகு மீண்டும் இரு நாடுகளுக்கு இடையே விமான போக்குவரத்து சேவை மீண்டும் தொடங்கியுள்ளது. கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளை கடைப்பிடித்து மீண்டும் விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது.
பிரிட்டனிலிருந்து வரும் பயணிகள் கட்டாயம் ஆர்டி–பிசிஆர் கொரோனா பரிசோதனையை செய்துகொள்ள வேண்டும் என்றும், அதற்காக ரூ.3,400 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் தடை உத்தரவுக்குப் பிறகு கடந்த 6-ஆம் தேதிடெல்லி மற்றும் மும்பையிலிருந்து பிரிட்டனுக்கு புறப்பட்ட விமானங்கள் இன்று மீண்டும் இந்தியா வந்தடைந்தன. 246 பயணிகளுடன் பிரிட்டனில் இருந்து புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் டெல்லிக்கு வந்தது.