இந்தியா – சினா எல்லை விவகாரம்: ராணுவ கமாண்டர்கள் மத்தியில் 10-வது சுற்று பேச்சுவார்த்தை தொடக்கம்

மோல்டா,

இந்தியா – சினா இடையே ராணுவ கமாண்டர்கள் மத்தியில் 10-வது சுற்று பேச்சுவார்த்தை தொடங்கி நடைபெற்று வருகிறது.

கிழக்கு லடாக்கில் உள்ள கல்வான் பகுதியில் இந்தியா – சீனா ராணுவ வீரர்கள் இடையே கடந்த ஜூன் 15 தேதி இரவில் கைகலப்பு ஏற்பட்டு பெரும் மோதலாக மாறியது. சீன வீரர்கள் இரும்பு கம்பி, கற்களால் தாக்கியதில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணமடைந்தனர்.

பதில் தாக்குதலில் சீன வீரர்கள் 35 பேர் உயிரிழந்ததாக இந்திய ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இதனை மறுத்து வந்த சீனா தற்போது, ஜூன் மாதம் நடைபெற்ற மோதலில் 4 வீரர்கள் உயிரிழந்ததாக ஒப்புக் கொண்டுள்ளது.

இந்நிலையில் மோல்டா என்ற இடத்தில் இந்தியா – சினா இடையே ராணுவ கமாண்டர்கள் மட்டத்திலான 10-வது சுற்று பேச்சுவார்த்தை தொடங்கியதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் பங்கோங் ஏரியின் வடக்கு மற்றும் தெற்கு கரைகளில் இருந்து வீரர்கள் வெளியேற்றப்பட்டதைத் தொடர்ந்து, கோக்ரா, ஹாட் ஸ்பிரிங் ஆகிய இடங்களில் இருந்து படைகளை வாபஸ் பெறுவது தொடர்பாக இரு நாட்டு கமாண்டர்களும் விவாதிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

ஏற்கெனவே நடத்தப்பட்ட 9-ம் கட்டப் பேச்சுவார்த்தையில் கிழக்கு லடாக்கில் இருந்து முன்கள வீரர்கள் திரும்பப் பெறப்பட்டனர். கிழக்கு லடாக்கில் பிப்ரவரி 10-ம் தேதி முதல் இரு தரப்புகளும் முன் அணிப் படைகளை விலக்கிக் கொள்வதற்கான பணிகளைத் தொடங்கியுள்ளதாக சீனா அறிவித்திருந்தது. எல்லையில் பதற்றத்தைத் தணித்து படைகளை பழைய நிலைக்கு கொண்டு செல்ல இருதரப்பு கமாண்டர்கள் இடையே தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

 

Translate »
error: Content is protected !!