பொதுமக்களிடம் காவல்துறையினர் கண்ணியமான முறையில் நடந்துகொள்ள வேண்டும் – கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் அறிவுறுத்தல்

இரவு நேர ஊரடங்கின் போது வெளியே வருவோரிடம் காவல்துறையினர் கண்ணியமான முறையில் நடந்துகொள்ள வேண்டும் என சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் அறிவுறுத்தியுள்ளார்.

அதே நேரத்தில் தேவையின்றி வாகனங்களில் சுற்றுபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து வாகனங்களை பறிமுதல் செய்யவும் அவர் உத்தரவிட்டுள்ளார். கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருவதால் அதனை கட்டுக்குள் வைக்கும் பொருட்டு தமிழகம் முழுவதும் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

 இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை ஊரடங்கை மீறி சுற்றித்திரிபவர்கள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து வருகின்றனர்.இந்நிலையில் கடந்தாண்டு சாத்தான்குளத்தில் நடைபெற்ற துரதிர்ஷ்டவசமான நிகழ்வு காரணமாக போலீஸார் மீதான இமேஜ் மக்கள் மத்தியில் சரியத் தொடங்கியது. இதுமட்டுமல்லாமல் வயிற்றுப்பிழைப்புகாக சாலையோர தள்ளுவண்டி கடை நடத்துவோரிடமும் காவல்துறையினர் கறார் காட்டி அவர்களை விரட்டியடித்த நிகழ்வுகளும் நடந்தன.

இப்போது இதுபோன்ற கசப்பான நிகழ்வுகளுக்கு இடமளிக்க விரும்பாத சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால், பொதுமக்களிடம் கண்ணியத்துடன் பேச வேண்டும் என போலீஸாருக்கு அறிவுரை கூறியுள்ளார். மேலும், அசம்பாவித நிகழ்வுகளை தவிர்க்கும் வகையில் காவல்துறையினரின் செயல்பாடுகள் இருக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

Translate »
error: Content is protected !!