ஈரோடு, சத்தியமங்கலம், புதுவடவள்ளியைச் சேர்ந்தவர் ராமலிங்கம். இவர் பள்ளிக் கல்வித்துறையில் அலுவலராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
புதுவடவள்ளி கிராமம் சத்தியமங்கலம் வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளதால் அங்கு குரங்குகள் கிராமங்களுக்குள் படையெடுப்பது வழக்கம். ராமலிங்கம் வீட்டின் எதிர்புறம் உள்ள காலியிடத்தில் இருக்கும் மரங்களில் வறட்சி காலங்களில் குரங்குகள் கூட்டமாக தங்கி சப்தமிட்டபடி இருந்தன. குரங்குகள் உணவுக்காக தவிப்பதைக் கண்ட ராமலிங்கம் கடைக்கு சென்று வாழைப்பழம், கேரட், கொய்யாப்பழம் மற்றும் தின்பண்டங்களை வாங்கிவந்து குரங்குகளுக்கு கொடுத்து வந்தார்.
அதையே கடந்த 6 ஆண்டுகளாக பழக்கி வந்தார் ராமலிங்கம். அவரைக் கண்டாலே குரங்குகள் பாசத்துடன் வந்து அவரை சூழ்ந்து நிற்கும். அவர் தோள்களில் சாய்ந்து கொண்டு அவர் தரும் உணவுகளை வாங்கி சாப்பிட்டு வந்தன. இந்நிலையில் கடந்த வாரம் ராமலிங்கத்திற்கு காய்ச்சல் ஏற்பட்டு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் அவர் சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் 24ம் தேதியன்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஆறு ஆண்டுகளாக குரங்குகளுக்கு உணவு கொடுத்து வந்த ஓய்வு பெற்ற அரசு ஊழியர் கொரோனாவுக்கு பலியான நிகழ்வு புதுவடவள்ளி கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.