சென்னை
சென்னை நகர காவல்துறையின் பக்கபலமாக இருக்கும் ஊர்க்காவல் படையினரின் தேவைகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்படும் என்று சென்னை நகர போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் உறுதியளித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்று காலங்களில் சிறப்பாக பணியாற்றிய 184 ஊர்க் காவல் படையினருக்கு சென்னை நகர போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் நினைவுப் பரிசு மற்றும் சான்றிதழ்களை இன்று வழங்கினார். இந்நிகழ்ச்சி வேளச்சேரி குருநானக் கல்லூரியில் நடந்தது.
சிறப்பக பணியாற்றிய ஊர் காவல் படையினரை கவுரவிக்கும் நிகழ்ச்சியான இதில் 184 ஊர்க்காவல் படையினர் கலந்து கொண்டனர். இவர்களில் 84 பேர் கொரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டு குணமடைந்து மீண்டும் பணிக்கு திரும்பி உள்ளனர்.
இந்த நிகழ்வில் நகர சென்னை கூடுதல் கமிஷனர் அமல்ராஜ், ஊர்க்காவல்படையின் உதவி சரக படை தளபதி மன்ஜித் சிங் நாயர் மற்றும் காவல்துறை உயர் போலீஸ் அதிகாரிகள் பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சியில் கமிஷனர் மகேஷ் குமார் அகர்வால் பேசுகையில், ‘‘சென்னையில் 3 ஆயிரம் ஊர்க்காவல் படையினர் உள்ளனர். சென்னைக்கு அடுத்த பெரிய நகரம் மதுரை. அங்கு காவல்துறையினரின் எண்ணிக்கையே 3 ஆயிரம்தான். உதவி தேவைப்படும் போது நம்முடன் இருக்கும் நண்பர்தான் உண்மை நண்பர். சென்னை காவல்துறையினருக்கு உண்மை நண்பர்கள் ஊர்க்காவல் படையினர்.
தீபாவளி, பொங்கல் பண்டிகை பாதுகாப்பு பணிகளிலும், இரவு ரோந்து பணி, பிரச்சினைக்குரிய காலங்களில் போலீசுக்கு ஊர்க்காவல் படையினர் உதவி செய்து வருகின்றனர். போலீசுக்கு தோளுக்கு தோளாக இருந்து பணி செய்து வருகின்றனர். எல்லா நேரங்களிலும் காவல்துறையினருடையே இருப்பார்கள். ஒரு மனிதனுக்கு இன்னொரு மனிதன் உதவி செய்ய வேண்டும். நாம் அனைவரும் காக்கி அணிந்து இருப்பது மற்றவர்களுக்கு உதவி செய்ய வாய்ப்பு கிடைத்துள்ளது. கொரோனா காலத்தில் நீங்கள் எப்படி உதவி செய்தீர்கள் என தெரியும். வரும் காலங்களில் ஊர்க்காவல் படையினருடைய தேவைகளை பூர்த்த செய்து நடவடிக்கை எடுக்கிறோம்” இவ்வாறு மகேஷ் குமார் அகர்வால் பேசினார்.