சென்னை,
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகிய இருவரும் இன்று தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்பமனு தாக்கல் செய்துள்ளனர்.
ஜெஜயலலிதாவின் பிறந்த நாளான பிப்ரவரி 24ம் தேதி அதிமுக தனது விருப்ப மனு வழங்கும் பணியை முறைப்படி துவங்கியுள்து. மார்ச் 5ம் தேதி வரை இந்த பணி தொடரும். அதிமுக தலைமையகத்தில் இன்று காலை ஜெயலலிதா உருவ சிலைக்கு எடப்பாடியார் மற்றும் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதன்பிறகு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பன்னீர் செல்வம் இருவரும், முதலாவதாக விருப்ப மனு வழங்கி தேர்தல் “திருவிழாவில் குதித்தனர்”. இதையடுத்து அமைச்சர்கள் மற்றும் சீனியர்கள் விருப்ப மனு வழங்கினர்.
ஜெயலலிதா அதிமுக பொதுச் செயலாளராக இருந்த காலம் வரை அவர் சார்பில் ஒவ்வொரு தொகுதியிலும் அந்தந்த தொகுதியில் போட்டியிட விரும்பும் அதிமுகவினர் விருப்பமனு தாக்கல் செய்வார்கள். அதாவது ஜெயலலிதாவுக்கு போகத்தான் தங்களுக்கு மிச்சம் என்பது இதன் அர்த்தம்.
மேலும் ஒவ்வொரு மனுவாலும் கூடுதல் பணம் அதிமுக தலைமைக்கு கிடைத்தது. இந்த முறை அப்படியான விதிமுறை இல்லை. எடப்பாடியார் மற்றும் ஓபிஎஸ் இருவரும் தங்கள் விருப்ப மனுக்களை தாங்களே தாக்கல் செய்தனர்.
இந்த முறை விருப்ப மனு கட்டணமாக தமிழகத்திற்கு ரூ.15000 நிர்ணயிக்கப்பட்டது. இதை செலுத்தி இருவரும் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளனர். எடப்பாடியார் மற்றும் ஓபிஎஸ் இருவருமே இப்போது தாங்கள் எம்எல்ஏக்களாக இருக்கும், அதே தொகுதிகளில் போட்டியிட விருப்ப மனு வழங்கியுள்ளனர்.
அதாவது எடப்பாடியார், சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியிலும், ஓபிஎஸ் தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் தகுதியிலும் போட்டியிட விருப்ப மனு வழங்கியுள்ளனர். இரு தொகுதிகளிலும் இருவரும் பலமாக உள்ளனர். எனவே அவர்கள் வெற்றி எளிதாகும். பாமக அதிமுக கூட்டணியில் இருந்தால் எடப்பாடியில் முதல்வரின் வெற்றி இன்னும் எளிதாகிவிடும் என்கிறார்கள். தேனி ஓபிஎஸ் கோட்டையாகும்.