என்னா வேகம்..! அதிமுக கூட்டணியில் பாமக.. முதல் ஆளாக தேர்தல் அறிக்கையை வெளியிட்டது

சென்னை,

அதிமுக கூட்டணியில் இடம்பெற்ற பாமக முதல் ஆளாக தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதில் கல்வி, உயர்கல்வி, விவசாயம், தொழில் துறை என அனைத்து தரப்பினருக்கான திட்டங்களையும் அறிவித்துள்ளது.

சட்டசபை தேர்தல் நடைபெற சரியாக இன்னும் ஒரு மாதம் உள்ளது. இந்த ஒரு மாதத்திற்குள் பிரச்சாரம், தொகுதி உடன்பாடு, போட்டியிடும் தொகுதிகள், வேட்பாளர் பட்டியல், தேர்தல் அறிக்கைகள் என தமிழகமே பரபரப்பாக இருக்க போகிறது. அந்த வகையில் பாட்டாளி மக்கள் கட்சி தமிழகத்தில் முதல் ஆளாக தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த முறை பாமகவிற்கு தமிழகத்தில் முக்கியத்துவம் கொடுக்கப்படுவதாக பார்க்கப்படுகிறது.

அதிமுக கூட்டணியில் கடந்த நாடாளுமன்றத் தேர்தல் முதல் பாஜக, பாமக, தேமுதிக, புதிய தமிழகம், தமாகா, புதிய நீதி கட்சி உள்ளிட்டவை இடம்பெற்றிருந்தன. இதே கூட்டணி சட்டசபை தேர்தலின் போதும் நீடிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் வன்னியர்களுக்கான 10.5 சதவீத இடஒதுக்கீடு கேட்டு பாமக ஆர்ப்பாட்டம் நடத்தியது.

ராமதாஸ், அன்புமணி உள்ளிட்டோர் முதல்வருக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில் பாமகவின் கோரிக்கையை அதிமுக ஏற்று அந்த இடஒதுக்கீட்டை ஏற்பதாக சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். இதையடுத்து ராமதாஸும், அன்புமணியும் முதல்வருக்கு நன்றி தெரிவித்தனர்.

இதையடுத்து அதிமுக கூட்டணியில் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை எந்த கட்சியை முதலில் அழைக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. அதன்படி பாமகவை முதல் முதலில் பேச்சுவார்த்தைக்கு அழைத்து 23 தொகுதிகளை கொடுத்தது. இதையடுத்து தேசிய கட்சியான பாஜகவுக்கு அழைப்பு விடுத்தது. பின்னர் தேமுதிகவுடனான பேச்சுவார்த்தை இழுபறி நிலையில் உள்ளது.

அது போல் முதல் கட்சியாக பாமகதான் தேர்தல் அறிக்கை புத்தகத்தை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில் கல்வி, உயர்கல்வி, விளையாட்டு, மக்கள் நலன், தொழில் உள்ளிட்ட துறைகளுக்கான திட்டங்களை வெளியிட்டுள்ளது. அது போல் எந்தெந்த தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்படுகிறது என்பது குறித்து ஆலோசனை நடத்தவும் பாமகவுக்கு முதல் கட்சியாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதனால் அதிமுக கூட்டணியில் பாமக முன்னிலைப்படுத்தப்படுகிறதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

Translate »
error: Content is protected !!