எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ், மாணவர்கள் 20-ந் தேதி கல்லூரிக்கு வர வேண்டும் என மருத்துவக் கல்வி இயக்குனர் நாராயணபாபு உத்தரவிட்டுள்ளார்.
சென்னை,
மருத்துவக் கல்வி இயக்குனர் நாராயணபாபு, மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்லூரி இயக்குனர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அதில் எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். படிப்பில் இடங்களை தேர்வு செய்த மாணவர்கள் 20ம் தேதி கல்லூரியில் சேர்ந்த விவரங்களை அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
மாணவர்கள் கல்லூரியில் சேர்ந்த அறிக்கையை சமர்ப்பிக்கும் போது, அவர்களின் முழு உடல் பரிசோதனை சான்றிதழையும் அனுப்ப வேண்டும் என்றும் முதலாமாண்டு மாணவர்கள் அனைவருக்கும் ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை கட்டாயம் செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் முதலாம் ஆண்டு மாணவர்களை ரேக்கிங் செய்வதை கண்காணித்து தடுப்பதற்கும், மருத்துவப் படிப்பு குறித்து ஆலோசனை வழங்குவதற்கும் குழுக்களை அமைக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். இதையடுத்து 20 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை அறிமுக வகுப்புகளை நடத்த வேண்டும் என்றும் மாணவர்களுக்கான பாடம் சார்ந்த வகுப்புகளை பிப்ரவரி 2 ஆம் தேதி முதல் நடத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு அவர்களது பெற்றோர்களின் விருப்ப அனுமதியுடன் கொரோனா தடுப்பூசி போடலாம் என்றும் மாணவர்களின் அனைத்து சான்றிதழ்களின் உண்மைத் தண்மையை அறிந்து கொள்வதற்காக அவர்களின் கைரேகையை பதிவு செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளார். கண்களின் ஐரிஸ் ஸ்கேனிங் மற்றும் புகைப்படத்தினையும் ஆய்வு செய்ய வேண்டும் என்றும் மாணவர்களின் இடது மற்றும் வலது கைரேகைகளை தனித்தனியாக சரிபார்த்து அதன் அறிக்கை மருத்துவக் கல்லூரி இயக்குனரகத்திற்கு அனுப்ப வேண்டும் என்றும் மருத்துவக் கல்வி இயக்குனர் தெரிவித்துள்ளார்.