பெட்ரோல் மற்றும் எரிவாயு சிலிண்டர்களின் விலையை உயர்த்தி நாட்டு மக்களை வாட்டி வதைப்பதா? – சீமான் கண்டனம்

தவறான பொருளாதாரக் கொள்கையினாலும், பிழையான நிர்வாக முடிவாலும் நாட்டின் பொருளாதாரத்தை அதலபாதாளத்திற்குள் தள்ளிவிட்டு எரி எண்ணெய்கள் மற்றும் எரிகாற்று உருளையின் விலையை உயர்த்தி நாட்டு மக்களை வாட்டி வதைப்பதா? என மத்திய அரசுக்கு, நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் பதிவிட்ட செய்தி,

வரலாறு காணாத வகையில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலையை உயர்த்தி மக்களை வாட்டி வதைத்து வரும் மத்திய அரசின் செயல்பாடுகள் கடும் கண்டனத்திற்கு உரியது.

மத்தியில் ஆளும் பாஜக அரசின் தவறான பொருளாதாரக்கொள்கைகளினாலும், பிழையான நிர்வாக முடிவுகளாலும் நாட்டின் பொருளாதாரத்தை அதலபாதாளத்துக்குள் தள்ளி, பணவீக்கம், தொழில் முடக்கம் போன்றவற்றை ஏற்படுத்தி, அதன் விளைவாக விலைவாசி கடுமையாக உயர்ந்து மக்கள் தத்தளித்து வரும் நிலையில் தற்போது பெட்ரோல், டீசலம் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையையும் உயர்த்தி நாட்டு மக்களை வாட்டி வதைத்து மேலும் வறுமையின் பிடிக்குள் தள்ளுவது ஏற்கவே முடியாத கொடுஞ்செயலாகும்.

கொரோனா ஊரடங்கு காலத்தில் பொருளாதாரச் சிக்கலில் இருக்கும் மக்களின் வாழ்வாதாரத்தை உறுதிசெய்யாது அவர்களை மென்மேலும் நெருக்கடிக்குள்ளாகி வரும் கொடுங்கோன்மை ஆட்சிமுறையும், நிர்வாகச் செயல்பாடுகளும் வெட்கக்கேடானது.

நாட்டின் பொருளாதாரத்தை மீட்க எவ்வித நடவடிக்கையையும் முடுக்கிவிடாத பாஜக அரசு, மக்கள் தலைமீது வரிச் சுமையை மட்டும் ஏற்றி வைப்பது எவ்வகையிலும் ஏற்புடையதல்ல. கடந்த டிசம்பர் மாதம் 650 ரூபாய் என்கிற அளவிலிருந்த சிலிண்டர் ஒன்றின் விலையானது தற்போது 850 ரூபாய் எனக் கட்டுக்கடங்காத அளவில் அதிகரித்துளது. இம்மாதம் மட்டும் வீடுகளுக்குப் பயன்படுத்தப்படும் சிலிண்டர் 25 ரூபாயும், வர்த்தகப் பயன்பாட்டு சிலிண்டர் விலை 84 ரூபாயும் உயர்த்தப்பட்டுள்ளது.

அதேபோல, வாகன எரி எண்ணெய்களின் விலையும் 100 ரூபாய் என அபரிமிதமாக உயர்ந்துள்ளது. இதன்மூலம், ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்கள் பெட்ரோல், டீசல் மற்றும் சிலிண்டர்களை பயன்படுத்த முடியாத கொடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

ஆகவே, இவ்விவகாரத்தில் ஒன்றிய அரசு, எண்ணெய் நிறுவனங்களிடமிருந்து விலை நிர்ணய அதிகாரத்தை மீளப்பெறுவதோடு, எரிபொருள் மீதான வரியையும் உடனடியாகக் குறைக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன். மேலும், தமிழ்நாட்டை ஆளும் திமுக அரசு தனது தேர்தல் வாக்குறுதியில் எரிபொருள் விலை குறைக்கப்படும்; சமையல் சிலிண்டருக்கு மானியம் வழங்கப்படும் என அளித்த உறுதிமொழியை, விலை உயர்வால் மக்கள் பெரும் இக்கட்டிற்கு ஆளாகியுள்ள தற்போதைய துயர காலத்தைக் கருத்தில்கொண்டு உடனடியாகச் செயல்படுத்த வேண்டும்என அதில்  கூறியிருந்தது.

 

 

 

Translate »
error: Content is protected !!