மும்பை,
நடப்பு நிதி ஆண்டின் முதல் 10 மாதங்களில் எல்.ஐ.சி.யின் பிரீமியம் மூலமான வருவாய் ரூ.1 லட்சம் கோடியை தாண்டி சாதனை படைத்துள்ளது.
எல்.ஐ.சி. (ஆயுள் காப்பீட்டுக் கழகம்) ஓய்வூதியம் மற்றும் குழு திட்டங்கள் மூலம் 2020–21 நிதி ஆண்டின் முதல் 10 மாதங்களில் பிரீமியம் மூலமான வருவாய் ரூ.1 லட்சம் கோடியை தாண்டி சாதனை படைத்துள்ளது. இந்த பிரமாண்டமான பிரீமிய வருவாய் தொகையை இரண்டு ஆண்டுகளாக தொடர்ச்சியாக கடந்திருப்பது இதுவே முதல் முறை ஆகும்.
மும்பை சி.எஸ்.டி. ரெயில் நிலையத்தில் நடந்த நிகழ்ச்சியில், மத்திய ரெயில்வேயை சேர்ந்த ரெயில் ஓட்டுனர்கள், தொழில்நுட்ப பணியாளர்கள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் உள்ளிட்ட ஊரடங்கு கதாநாயகர்களை எல்.ஐ.சி.யின் நிர்வாக இயக்குனர் விபின் ஆனந்த் சான்றிதழ் வழங்கி கவுரவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் எல்.ஐ.சி.யின் மேற்கு மண்டல மேலாளர் விகாஷ் ராவ், கார்ப்பரேட் கம்யூனிகேசன்ஸ் செயல் இயக்குனர் ராஜிவன் நாயர், மும்பை கோட்ட ரெயில்வே மேலாளர் ஷலப் கோயல் ஆகியோர் கலந்துகொண்டனர்.
ஏஜெண்டுகள், மேம்பாட்டு அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின் செயல்பாட்டில் ஈடுபாட்டுடன் ஒரு விதிவிலக்கான வேலையை எல்.ஐ.சி. செய்து வருகிறது. கடந்த 10 மாதங்களில் மட்டும் ரூ.1.55 கோடி ‘கிளெய்ம்’களுக்கு தீர்வு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் 1.40 கோடி பேர் புதிதாக இன்சூரன்சு செய்துள்ளனர். நாட்டின் வளர்ச்சிக்காக அரசின் பிணையில் ரூ.3 லட்சம் கோடிக்கும் மேல் முதலீடு செய்யப்பட்டுள்ளது. மேற்கண்ட தகவல் எல்.ஐ.சி. வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.