ஏ.டி.எம். உடைத்து கொள்ளை முயற்சி! போடி அருகே பரபரப்பு!

போடி அருகே வங்கி ஏ.டி.எம். இயந்திரத்தை உடைத்து பணம் கொள்ளையடிக்க முயற்சி நடந்துள்ளது, அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

தேனி மாவட்டம், போடி அருகே உள்ள சில்லமரத்துப்பட்டியில், பாரத ஸ்டேட் வங்கி ஏடிஎம் மையம் உள்ளது. போடி-தேவாரம் சாலையில் உள்ள இந்த ஏ.டி.எம். மையத்தில் லிருந்து இன்று காலை அபாய ஒலி அலறியது.

இதுகேட்டு அப்பகுதியினர் பதறினர். மேலும் இதுகுறித்து போடி காவல்துறைக்கும் தகவல் அளித்தனர். இதையடுத்து, போடி தாலுகா காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

அங்கு சென்று பார்த்த போது ஏடிஎம் மையத்தில் உள்ள இயந்திரம் உடைக்கப்பட்டு இருப்பது கண்டறியப்பட்டது. கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு, ஆய்வுகள் நடைபெற்றன.

மேலும், வங்கி அதிகாரிகள் வரவழைக்கப்பட்டு பணம் ஏதும் திருடு போனதா என்று சரிபார்க்கப்பட்டது. அதில், பணம் திருடு போகவில்லை என்பது உறுதி செய்யப்பட்டது. திருட வந்த நபர்கள் அங்கிருந்த சிசிடிவி கேமராவை துணியால் மறைத்துவிட்டு திருட முயன்றது, விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த கொள்ளை முயற்சி குறித்து போடி தாலுகா காவல் நிலைய காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சில்லமரத்துப்பட்டி கிராமத்தில் ஏ.டி.எம். இயந்திரத்தை உடைத்து திருட முயன்ற சம்பவம், போடி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Translate »
error: Content is protected !!