செய்தி வாசிப்பாளர் பணிக்கு ஓஎல்எக்ஸ் மூலம் இன்டர்வியூவுக்கு அழைப்பது போல இளம்பெண்ணை ஓட்டல் அறைக்கு அழைத்துச் சென்று நுாதன முறையில் நகைகளை மோசடி செய்த கணவன், மனைவியை போலீசார் கைது செய்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம், பரக்காவட்டுவில்லை என்ற ஊரைச் சேர்ந்தவர் இளம்பெண் மினிமோல் (27). கடந்த வாரம் துரைப்பாக்கம் போலீசில் ஒரு புகார் மனு அளித்தார். அதில் அவர் ‘‘செய்தி வாசிப்பாளர் வேலை தேடி ஊரில் இருந்து சென்னைக்கு வந்த போது ஓஎல்எக்ஸ் வலைதளத்தில் சினிமாவில் நடிக்க மற்றும் செய்தி வாசிப்புப் பணிக்கு ஆட்கள் தேவை என்ற விளம்பரத்தை பார்த்தேன். அதில் போட்டிருந்த எண்ணை தொடர்பு கொண்டு பேசிய போது துரைப்பாக்கம் பகுதியில் ஒரு ஹோட்டலுக்கு இன்டர்வியூவுக்கு வரும்படி வரவழைத்தனர். அந்த ஓட்டல் அறைக்கு நான் சென்ற போது எனக்கு மேக்கப் ஒத்திகை செய்ய வேண்டும் என்று சொல்லி நான் கழுத்தில் அணிந்திருந்த நகைகளை மேஜையில் கழற்றி வைத்து விட்டு பாத்ரூமுக்குள் சென்று முகம் கழுவ சொன்னார்கள். நான் பாத்ரூமுக்குள் சென்ற போது என்னை உள்ளே வைத்து பூட்டி விட்டு எனது நகையுடன் கம்பி நீட்டி விட்டார்கள்’’ இவ்வாறு அந்த புகார் மனுவில் கூறியிருந்தார்.
இந்த புகார் மனு தொடர்பாக அடையாறு துணைக்கமிஷனர் விக்ரமன் மேற்பார்வையில், துரைப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதனையடுத்து இந்த மோசடியில் ஈடுபட்ட பாலவாக்கம் குப்பம் பகுதியில் வசித்து வந்த தேனியைச் சேர்ந்த ராவின் பிஸ்ட்ரோ (வயது 30), திருவான்மியூரைச் சேர்ந்த தீபா (எ) செண்பகவள்ளி (வயது 38) ஆகிய இருவரையும் கைது செய்தனர். கணவன் மனைவியான இருவரும் சேர்ந்து மேன்பவர் நிறுவனம் நடத்தியதில் வருமானம் இல்லாததால் இது போன்று ஓஎல்எக்ஸ் இணையதளத்தை பயன்படுத்தி நுாதன முறையில் நகை மோசடி செய்ததாக போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளனர். அவர்களிடம் இருந்து நகைகள் மற்றும் இருசக்கரவாகனம் பறிமுதல் செய்தனர்.
ராவின் பிஸ்ட்ரோ, தீபா இருவரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி நீதிமன்றக்காவலில் சிறையில் அடைத்தனர். திறமையாக துப்புதுலக்கிய தனிப்படையினரை கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் வெகுவாக பாராட்டினார்.