சென்னையில் கல்லுாரி மாணவியிடம் இன்ஸ்டாகிராமில் பழகி ஆபாசப் வீடியோ எடுத்து மிரட்டல் விடுத்த பிஇ பட்டதாரி வாலிபரை சென்னை அடையாறு சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.
சென்னை, சைதாப்பேட்டையைச் சேர்ந்த கல்லுாரி மாணவி இன்ஸ்டாகிராமில் அறிமுகமாகி வாலிபர் ஒருவருடன் பழகியுள்ளார். நட்பு காதலாக மாறியது. இருவரும் ஒருவருக்கொருவர் ஆபாசமாக வீடியோ சேட்டிங் செய்யும் அளவுக்கு நெருக்கமானார்கள். இந்நிலையில் அந்த வாலிபர் மாணவியின் தோழிகளின் செல்போன் நம்பர்களை கேட்டு தொல்லை செய்துள்ளார். மேலும் அவருக்கு பல பெண்களிடம் தவறான உறவு இருப்பது தெரியவந்தது. இதனால் அந்த வாலிபரை மாணவி தவிர்த்து வந்துள்ளார். இதனால் ஆத்திரம் அந்த வாலிபர் தனது செல்போனில் பதிவு செய்து வைத்திருந்த மாணவியின் செக்ஸ் வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் பரப்பியுள்ளார்.
அது தொடர்பாக மாணவியின் தந்தை அடையாறு துணைக்கமிஷனர் விக்ரமனிடம் புகார் அளித்தார். அது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தினர். அதனைத் தொடர்ந்து சென்னை தண்டையார்பேட்டை, முத்தமிழ் நகர் பகுதியில் வசித்து வரும் அருண் கிறிஸ்டோபர் (வயது 25) என்ற பிஇ பட்டதாரியை கைது செய்தனர். ஏரோனாட்டிக்கல் இன்ஜினியரிங் படித்த கிறிஸ்டோபர் தற்போது மின்வாரியத்தில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வருகிறார் என்பது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. அவரது செல்போனை ஆராய்ந்த சைபர் கிரைம் பிரிவு போலீசார் அதில் easy wallet என்ற Cloud App ல் மறைத்து வைத்திருந்த ஆபாச வீடியோக்களை உரிய மென்பொருள் மூலம் மீட்டு எடுத்தனர். அப்போது அதில் பலபெண்களின் நூற்றுக்கணக்கான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இருந்ததை கண்டு அதிர்ந்தனர். கிறிஸ்டோபரிடம் அவர் பயன்படுத்தி வந்த லேப்டாப் மற்றும் இரண்டு செல்போன்கள் கைப்பற்றப்பட்டன. விசாரணைக்குப் பின்னர் கிறிஸ்டோபர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சென்னை புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
துணைக்கமிஷனர் வேண்டுகோள்
––––––––––––––––––––––––––––––––––––––––––
இது போன்று அறிமுகம் இல்லாத நபர்களிடம் பெண்கள் ஜாக்கிரதையாக இருக்கும்படியும், சமூக வலைதளங்களை பயன்படுத்தும் போது அதிக கவனம் தேவை எனவும் அதேபோல் தனிப்பட்ட வகையிலான புகைப்படங்களை யாராயிருப்பினும் பகிரவேண்டாம் எனவும் அடையாறு துணைக்கமிஷனர் விக்ரமன் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் இதுபோன்ற செயல்களில் யாராவது ஈடுபடுவது தெரிய வந்தால் தன்னுடைய தனிப்பட்ட எண் 8754401111 என்ற எண்ணிற்கு அழைக்கலாம் எனவும் அதில் எந்தவித தயக்கமும் காட்டவேண்டாம் எனவும் அளிக்கப்படும் தகவல்கள் ரகசியம் காக்கப்படும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.