மூன்றாண்டுகள் கழித்து நீர்வரத்து கண்ட பாலாற்றில் கொத்துக் கொத்தாக மீன்களை மடை கட்டி கிராம மக்கள் அள்ளிச் சென்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அனைத்து நீர்நிலைகளிலும் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது. இதன் ஒரு பகுதியாக மாவட்டத்திலுள்ள 102 பொதுப்பணித்துறை ஏரிகள் முழுமையாக நிரம்பின. அதிக மழை காரணமாக மூன்றாண்டுகளுக்குப் பிறகு பாலாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் கரையோரம் வசிக்கும் மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்திருக்கிறார்கள். மேலும் பாலாற்றில் தற்போது அதிக அளவிலான விறால் குட்டி, கொறவை, கெளுத்தி போன்ற மீன்கள் படையெடுத்து வர ஆரம்பித்துள்ளன. அவற்றை கிராம மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் அவற்றை பிடித்துச் செல்கிறார்கள். பொதுவாக பாலாற்றில் நீர் பெருக்கெடுத்து ஓடும்பொழுது நீர் வரத்து கால்வாய் மூலம் கிராமப்புற ஏரிகளுக்கு நீர் பிரிந்து செல்லும். அவ்வாறு செல்லும் நீர் வரத்து கால்வாயில் நீந்தி செல்லும் மீன்கள் கிராம ஏரிகளுக்கு வர முயற்சிக்கும். அப்போது கால்வாயில் இருந்து ஒரு சிறிய மடை கட்டி மீன்களை தடுத்து நிறுத்தி எதிர்நீச்சல் போட்டுக் கொண்டிருக்கும் பல ஆயிரக்கணக்கான மீன்களை கிராம மக்கள் கொத்துக் கொத்தாக அள்ளி செல்லும் காட்சி தற்போது சமூக வலைத்தளத்தில் மிகவும் வைரலாக பரவி வருகிறது.
அதிகப்படியான மீன் கிடைத்து இருப்பதனால் பல கிராமங்களில் நாள் முழுவதும் மீன் குழம்பு வாசம் வீசுகிறது.