கார்களை வாடகைக்கு வாங்கி மோசடி செய்த நபர் கைது

சென்னை கிண்டியில் கார்களை வாடகைக்கு வாங்கிச் சென்று மோசடியில் ஈடுபட்ட முன்னாள் குற்றவாளியை போலீசார் கைது செய்து கார்களை பறிமுதல் செய்தனர்.

சென்னை, கோட்டூர்புரம், திருவள்ளுவர் நகரில் வசித்து வருபவர் ஆகாஷ் சிங் (வயது 26). இவர் தனது பெயரிலும், தனது தாய் சுசிலா பெயரிலும் இரண்டு கார்களை வைத்திருந்துள்ளார். அதனை வாடகைக்கு விட்டு சம்பாதித்து வந்தார். இந்நிலையில் கிண்டி தொழிற்பேட்டை, லேபர் காலனியைச் சேர்ந்த அருண்குமார் (வயது 32) என்பவர் ஆகாஷ்சிங்கிடம் மாத வாடகையாக ரூ. 28 ஆயிரம் தருவதாக கூறி ஆகாஷ்சிங்கின் தாயாரின் பேரில் இருந்த ஹோண்டா அமேஸ் காரை எடுத்துச் சென்றுள்ளார். அதற்கு 2 மாதங்கள் நல்லமுறையில் வாடகையை கொடுத்துள்ளார். அதனையடுத்து ஆகாஷ்சிங் தனது காரையும் தனது நண்பர் கார்த்திக் என்பவரின் ஹுண்டாய் 20 காரையும் சேர்த்து அருண்குமாரிடம் வாடகைக்கு கொடுத்தார்.

ஆனால் அடுத்த 2 மாதங்களில் வீட்டை காலி செய்த அருண்குமார் போனை அணைத்து வைத்து விட்டு அங்கிருந்து தலைமறைவாகி விட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த ஆகாஷ் சிங் தனது கார்களை மீட்டுத்தரும்படி சென்னை கிண்டி போலீசில் புகார் அளித்தார்.

துணைக்கமிஷனர் விக்ரமன் மேற்பார்வையில் கிண்டி, குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் கர்ணன் அது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். தலைமறைவான அருண்குமாரின் செல்போன் எண்ணை ஆய்வு செய்ததில் அவர் பல்லாவரத்தில் உள்ள அவரது மாமியார் வீட்டில் தங்கியிருப்பது தெரியவந்தது. மேலும் தான் வாடகைக்கு எடுத்த மூன்று கார்களையும் தன்னை உரிமையாளர் என்று அடையாளப்படுத்தி அடமானம் வைத்து விற்க முயன்றதும் தெரியவந்தது. மேலும் நண்பர் கார்த்திக்கின் காரினை விபத்துக்குள்ளாக்கி சேதப்படுத்திய நிலையில் வைத்திருந்துள்ளார். அதனையடுத்து போலீசார் அருண்குமாரை கைது செய்தனர். இதனையடுத்து அவரிடம் இருந்து மற்ற இரண்டு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அவரிடம் விசாரணை நடத்தியதில் அருண்குமார் இதே போல கடந்த 2016ம் ஆண்டு கோடம்பாக்கத்தில் உள்ள ஹுண்டாய் கார் ஷோரூமில் கார் விற்பணை நிறுவனத்தில் சேல்ஸ்மேனாக வேலை செய்து வந்துள்ளார். அப்போது கார் புக்கிங் செய்த வாடிக்கையாளர்கள் 26 பேருக்கு கார்களை தராமல் அவற்றை குறைந்த பணத்தில் விற்பணை செய்து வாடிக்கையாளர்களின் பணத்தை திருடியுள்ளார். அது தொடர்பாக நந்தம்பாக்கம் போலீசார் அருண்குமாரை கைது செய்துள்ளனர். மேலும் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசிலும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Translate »
error: Content is protected !!